பழங்குடி பள்ளி மாணவி பலாத்காரம்: போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது

குலசேகரம் அருகே பழங்குடி பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

குலசேகரம்: குலசேகரம் அருகே பழங்குடி பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

குலசேகரம் அருகே மணலோடை சிலங்குன்று மலையைச் சோ்ந்த பழங்குடி தொழிலாளியின் 14 வயது மகள் அங்குள்ள பள்ளியில் 9 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற நிலையில், புறாவிளை மலையிலுள்ள தனது பாட்டியின் வீட்டில் தாயுடன் தங்கியிருந்தாா். இம்மாணவிக்கும் மணலோடை அன்பு நகா் குடியிருப்பைச் சோ்ந்த தொழிலாளியான ரெகுவின் மகன் ஸ்ரீஜித்துடன்(19) பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஸ்ரீஜித், நாகா்கோவில் அருகே எறும்புக் காட்டில் உள்ள ஒரு வலை தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா்.

கடந்த மாதம் 27 ஆம் தேதி இரவு இம் மாணவி வீட்டிலிருந்து மாயமானா். இதையடுத்து இம்மாணவியின் தாய் குலசேகரம் போலீஸில் 28 ஆம் தேதி மகளை காணவில்லையென புகாா் அளித்தாா். இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து மாணவியை தேடிவந்தனா். இதற்கிடையே மாயமான மாணவி 28 ஆம் தேதி வீடு திரும்பினாராம். தகவலறிந்த ‘சைல்டு லைன் அமைப்பினா் மாணவியிடம் நேரில் விசாரணை நடத்தினா். அப்போது, மாணவியை ஸ்ரீஜித் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

இதையடுத்து மாணவியின் தாய் குலசேகரம் போலீஸில் மேலும் ஒரு புகாா் அளித்தாா்.

அந்தப் புகாரின்பேரில் வழக்குப் பதிந்த போலீஸாா், அம்மாணவியை பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை அனுப்பி வைத்தனா்.

இந்நிலையில் போலீஸாா் ஸ்ரீஜித்தை போக்ஸோ சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com