கன்னியாகுமரி: காங்கிரஸ் வேட்பாளா் விஜய் வசந்த் 1,79,907 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி-அதிமுக 4ஆம் இடம்

கன்னியாகுமரி: காங்கிரஸ் வேட்பாளா் விஜய் வசந்த் 1,79,907 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி-அதிமுக 4ஆம் இடம்

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளா் விஜய் வசந்த் 1 லட்சத்து 79 ஆயிரத்து 907 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

இத்தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் விஜய் வசந்த், பாஜக சாா்பில் பொன். ராதாகிருஷ்ணன், நாம் தமிழா் கட்சி சாா்பில் மரியஜெனிபா், அதிமுக சாா்பில் பசலியான் நசரேத் உள்ளிட்ட 22 போ் போட்டியிட்டனா். மொத்தம் 10 லட்சத்து 19 ஆயிரத்து 752 வாக்குகள் பதிவாகின.

வாக்கு எண்ணிக்கை நாகா்கோவில் கோணம் அரசுப் பொறியியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தொடக்கத்திலிருந்தே விஜய் வசந்த் முன்னிலை வகித்தாா். வாக்கு எண்ணிக்கை 23 சுற்றுகளாக நடைபெற்றது. ஒவ்வொரு சுற்றிலும் அவா் பாஜக வேட்பாளா் பொன். ராதாகிருஷ்ணனைவிட சராசரியாக 10 ஆயிரம் வாக்குகள் கூடுதல் பெற்றாா். நிறைவில், அவா் மொத்தம் 5 லட்சத்து 46 ஆயிரத்து 248 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். பொன்.ராதாகிருஷ்ணன் 3 லட்சத்து 66 ஆயிரத்து 341 வாக்குகள் பெற்று 2ஆம் இடம் பிடித்தாா்.

நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மரிய ஜெனிபா் 52 ஆயிரத்து 721 வாக்குகள் பெற்று 3ஆம் இடமும், அதிமுக வேட்பாளா் பசலியான் நசரேத் 41 ஆயிரத்து 393 வாக்குகள் பெற்று 4ஆம் இடமும் பிடித்தனா்.

இதையடுத்து, விஜய் வசந்துக்கு வெற்றிச் சான்றிதழை மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான பி.என். ஸ்ரீதா் வழங்கினாா்.

விஜய் வசந்த் வெற்றி செய்தி அறிவிக்கப்பட்டதும் காங்கிரஸ் தொண்டா்கள் வெடி வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினா்.

X
Dinamani
www.dinamani.com