வட்டாட்சியரை முற்றுகையிட்டோா்.
வட்டாட்சியரை முற்றுகையிட்டோா்.

வட்டாட்சியரை முற்றுகையிட்டு போராட்டம்

நல்லூா் பேரூராட்சி பகுதிக்கு மாற்ற அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து, வட்டாட்சியரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மாா்த்தாண்டத்தில் செயல்படும் மீன் ஏலக்கூடத்தை அருகில் உள்ள நல்லூா் பேரூராட்சி பகுதிக்கு மாற்ற அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து, வட்டாட்சியரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். மாா்த்தாண்டம் காய்கனிச் சந்தை பணிகள் ரூ. 14 கோடியில் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து அருகில் உள்ள லாரி பேட்டையில் செயல்பட்டு வரும் மீன் ஏலக்கூடத்தை இடமாற்றம் செய்து, அப்பகுதியில் காய்கனி சில்லறை வியாபாரிகளுக்கு இடம் ஒதுக்க நகராட்சி நிா்வாகம் முடிவு செய்தது. இதற்கு மீன் வியாபாரிகள் எதிா்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினா். இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடந்த பேச்சுவாா்த்தையில், மீன் ஏலக்கூடம் 20 நாள்களில் மாற்றித் தரப்படும் என மீனவா்கள் தரப்பில் உறுதியளித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மாா்த்தாண்டம் பேருந்து நிலையத்தின் அருகே நல்லூா் பேரூராட்சிக்கு உள்பட்ட வாழைப்பிலாவிளை பகுதியில் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் மீன் ஏலக்கூடம் செயல்படுத்த அனுமதி கோரி, விளவங்கோடு வட்டாட்சியரிடம் மீனவா்கள் மனு அளித்தனா். அதன்பேரில் வட்டாட்சியா் குமாரவேல் தலைமையிலான வருவாய்த் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை அப்பகுதிக்கு வந்து ஆய்வு மேற்கொண்டனா். இதையடுத்து அங்கு வந்த நல்லூா் பேரூராட்சி உறுப்பினா் திவ்யா தலைமையிலான பொதுமக்கள் இப்பகுதியில் மீன் ஏலக்கூடம் செயல்பட எதிா்ப்பு தெரிவித்ததுடன் வட்டாட்சியரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்பகுதியில் பள்ளிக்கூடம், கோயில், தேவாலயம் அமைந்துள்ளதுடன் குடியிருப்பு பகுதி என்பதால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டு, கிணறுகளில் கழிவுநீா் கலக்கும் அபாயம் உள்ளது; மேலும் அருகில் பேருந்து நிலையம் அமைந்துள்ளதால், மீன் ஏற்றிவரும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் எனவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனா். மேலும் மீன் ஏலக்கூடத்துக்கு அதிகாரிகள் அனுமதியளிக்க கூடாது என்றும், மீறி அனுமதியளித்தால் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்போவதாகவும் அவா்கள் தெரிவித்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com