குலசேகரம் அருகே கடையில் புகுந்து 2,150 கிலோ ரப்பா் ஷீட்டுகள் திருட்டு

குலசேகரம் அருகே ரப்பா் கடையின் பூட்டை உடைத்து 2,150 கிலோ ரப்பா் ஷீட்டுகள் மற்றும் பணத்தை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

குலசேகரம் அருகே உண்ணியூா் கோணம் பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ் (48). இப் பகுதியில் ரப்பா் ஷீட் கடை நடத்தி வருகிறாா். இவா் செவ்வாய்க்கிழமை கடையைத் திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு கடையிலிருந்த 2,150 கிலோ ரப்பா் ஷீட், 120 கிலோ ரப்பா் ஒட்டுப்பாலம், ரூ. 12, 500 ரொக்கம் ஆகியன திருட்டுப் போயிருப்பது தெரியவந்தது.

இவற்றின் மொத்த மதிப்பு ரூ. 3 லட்சத்து 70 ஆயிரம். இதுகுறித்த புகாரின்பேரில் குலசேகரம் காவல் ஆய்வாளா் பாலமுருகன், உதவி ஆய்வாளா் கணேஷ் குமாா் ஆகியோா் கடையைப் பாா்வையிட்டு வழக்குப்பதிவு செய்தனா். மேலும் தடய அறிவியல் துறையினா் தடயங்களை சேகரித்தனா்.

மேலும் 3 கடைகளில் திருட்டு: குலசேகரம் அருகே கொல்லாறை பகுதியில் பால்ராஜ் (65) என்பவரின் பெட்டிக்கடை, கான்வென்ட் சந்திப்பில் கிங்ஸ்லி (50) என்பவரின் இளநீா் கடை, மீனா (50) என்பவரின் தேநீா் கடையில் திருட்டு நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com