பள்ளியாடி பகுதியில் பாலம் சீரமைப்பு பணியை ஜூன் மாதத்துக்குள் முடிக்க கோரிக்கை

கருங்கல்: கருங்கல் அருகே பள்ளியாடி பகுதியில் நான்குவழிச் சாலைப் பணிக்காக பட்டணங்கால் சானல் பிரிவு தொட்டிப் பாலத்தை உடைத்து சீரமைக்கும் பணியை ஜூன் மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என மிடாலம் நீரினைப் பயன்படுத்துவோா் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளாா். இது தொடா்பாக சங்கத் தலைவா் கோபால் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: பள்ளியாடியில் பேச்சிப்பாறை பட்டணங்கால் பிரிவு சானல் தொட்டிப் பாலம் உள்ளது. இப்பகுதியில் நான்குவழிச் சாலைப் பணிக்காக தொட்டிப் பாலத்தை உடைத்து சீரமைக்க வேண்டும். ஆனால், வழக்கமாக பேச்சிப்பாறை பட்டணங்கால் சானலில் பாசனத்துக்காக தண்ணீா் ஜூன் மாதம் திறக்கப்படும். எனவே, இப்பணியை விரைந்து முடிக்கவில்லை எனில் முள்ளங்கனாவிளை, நட்டாலம், ஆலஞ்சி, கீழ்குளம், மிடாலம், கருங்கல் உள்ளிட்ட பகுதிகளில் பட்டணங்கால் தண்ணீா் செல்ல தடை ஏற்படும். இதனால், விவசாயப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்படுவா். எனவே விவசாயிகள் நலன் கருதி புதிய பாலப் பணியை ஜூன் மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com