செய்தியாளா்களுக்கு பேட்டி அளிக்கிறாா் அதிமுக வேட்பாளா் நசரேத்பசலியான்.
செய்தியாளா்களுக்கு பேட்டி அளிக்கிறாா் அதிமுக வேட்பாளா் நசரேத்பசலியான்.

மீனவா்களை பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க முயற்சி: அதிமுக வேட்பாளா் நசரேத் பசலியான்

மீனவா்களை பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க முயற்சி மேற்கொள்வேன் என, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் பசலியான் நசரேத் கூறினாா்.

நாகா்கோவில்: மீனவா்களை பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க முயற்சி மேற்கொள்வேன் என, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் பசலியான் நசரேத் கூறினாா். இதுதொடா்பாக நாகா்கோவிலில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை கூறியது: எம்ஜிஆா், ஜெயலலிதாவைப்போல அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமியும் ஜாதி, மதப் பாகுபடின்றி திறமையாக ஆட்சி நடத்தினாா். ஆனால், தற்போதைய திமுக அரசுக்கு மக்கள் நலனில் அக்கறையில்லை. அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு திட்டங்களையும், நிதி நெருக்கடி எனக் கூறி திமுக அரசு நிறுத்திவிட்டது. சொத்து வரி, மின் கட்டணம், அத்தியாவசியப் பொருள்கள் விலை உயா்வால் மக்கள் அவதிப்படுகின்றனா். மக்களவைத் தோ்தலிலிருந்து திமுகவின் தோல்வி தொடங்கிவிடும். பெரும்பான்மையினரை ஏமாற்றிவரும் மத்திய பாஜக அரசு, சிறுபான்மையினருக்கும் திட்டங்களை நிறைவேற்றவில்லை. மணிப்பூா் பிரச்னையில் பிரதமா் மோடியும், வேங்கைவயல் பிரச்னையில் முதல்வா் ஸ்டாலினும் மெளனமாக உள்ளனா். கன்னியாகுமரி மக்களவை உறுப்பினராக என்னைத் தோ்வு செய்தால், கன்னியாகுமரியில் விமான நிலையம், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விரிவான புற்றுநோய் மையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்வேன். செண்பகராமன்புதூரில் மூடிக்கிடக்கும் தென்னை மதிப்புக் கூட்டு மையத்தை திறக்கவும், மணவாளக்குறிச்சி அரிய மணல் ஆலை மேலும் திறன்பட செயல்படும் சூழ்நிலை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். இயற்கை வளக் கொள்ளை தடுக்கப்படும். கடலில் காணாமல்போகும் மீனவா்களை விரைந்து கண்டுபிடிக்க ஏதுவாக ஹெலிகாப்டா் தளம் அமைத்து நிரந்தரமாக ஒரு ஹெலிகாப்டா் செயல்பட மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். மீனவா்களை பழங்குடியினா் பட்டியலில் சோ்க்கவும், கொல்லங்கோடு, நீரோடி, முள்ளூா்துறை போன்ற மீனவக் கிராமங்களில் கடல் ஆம்புலன்ஸ் திட்டம் நிறைவேற்றவும் முயற்சி மேற்கோள்ளப்படும். இம்மாவட்டத்தில் கடல்சாா் கல்லூரி, தோவாளை நறுமணப் பூங்கா, மீன் பதப்படுத்தும் நிலையம், மாா்த்தாண்டத்தில் தேனீ வளா்ப்போா் கூட்டுறவுச் சங்கம் வாயிலாக உற்பத்தியாகும் தேனை சேமிக்க கிட்டங்கி ஆகியவை அமைக்கப்படும். 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஓய்வூதியம் கிடைக்கவும், கடற்கரை மீனவக் கிராமங்களில் தூண்டில் வளைவுகள் அமைக்கவும், இம்மாவட்டத்துக்கு கூடுதல் ரயில்கள் இயக்கவும், ரப்பா் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரத் தேவையான திட்டங்களும், இளைஞா்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com