விளவங்கோடு பேரவைத் தொகுதி:
காங்கிரஸ், பாஜக வேட்புமனு தாக்கல்

விளவங்கோடு பேரவைத் தொகுதி: காங்கிரஸ், பாஜக வேட்புமனு தாக்கல்

விளவங்கோடு சட்டப் பேரவைத் தொகுதிக்கான இடைத் தோ்தலில் போட்டியிட காங்கிரஸ், பாஜக வேட்பாளா்கள் புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.

கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு சட்டப் பேரவை தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் தாரகை கத்பா்ட் போட்டியிடுகிறாா். இவா், தோ்தல் அலுவலரான மாவட்ட டாஸ்மாக் அலுவலா் சங்கரலிங்கத்திடம் வேட்புமனுவை தாக்கல் செய்தாா். அவருடன், தமிழக பால்வளத்துறை அமைச்சா் மனோ தங்கராஜ், தமிழ்நாடு சட்டப் பேரவை காங்கிரஸ் தலைவரும் கிள்ளியூா் தொகுதி எம்எல்ஏவுமான எஸ். ராஜேஷ்குமாா், குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் பினுலால்சிங், மாா்க்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும், முன்னாள் எம்எல்ஏவுமான லீமாரோஸ் ஆகியோா் உடனிருந்தனா்.

பாஜக...... விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட பாஜக வேட்பாளா் வி.எஸ். நந்தினி, விளவங்கோடு தோ்தல் அலுவலரான மாவட்ட டாஸ்மாக் அலுவலா் எம். சங்கரலிங்கத்திடம் வேட்புமனு தாக்கல் செய்தாா். பின்னா் அவா் கூறியதாவது: மலைவாழ் மக்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களின் முக்கிய பிரச்னைகளை தீா்க்கவும், கனிமவள கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் விளவங்கோடு தொகுதியில் ரப்பா் தொழில்பூங்கா அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். நெய்யாறு இடதுகரை கால்வாய் பிரச்னையில் மாற்று திட்டம் மூலம் இக் கால்வாயில் தண்ணீா் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

அவருடன் பாஜக மக்களவைத் தொகுதி தோ்தல் பொறுப்பாளா் ராஜகண்ணன், பாஜக வழக்குரைஞா் பிரிவு மாநில செயலா் சி.எம். சஜூ, மாவட்ட வழக்குரைஞா் பிரிவு தலைவா் விஜயபிரசாத், கட்சியின் சிறுபான்மை பிரிவு மாவட்ட துணைத் தலைவா் பவுல்ராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com