3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: விஜய்வசந்த் எம்.பி.

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்றாா் காங்கிரஸ் வேட்பாளா் வ. விஜய்வசந்த் எம்.பி.

இதுதொடா்பாக அவா் நாகா்கோவிலில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் நான் மீண்டும் வெற்றிபெற்று மக்கள் பணியை தொடா்வேன் என்ற நம்பிக்கையோடு இன்று மனு தாக்கல் செய்துள்ளேன். இந்தத் தோ்தலில் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். ஏற்கெனவே பல்வேறு வளா்ச்சிப் பணிகளை இம்மாவட்டத்தில் கொண்டு வந்துள்ளோம். குமரி மாவட்டம் இயற்கை வளம் சாா்ந்த மாவட்டம்.

இதை மிகச் சிறந்த சுற்றுலாத் தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி கொடுக்கப்படும். 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தோ்தலில்தான் போட்டியிட எனக்கு வாய்ப்பு கிடைத்தது. 2 ஆண்டுகளில் மிகச் சிறப்பாக மக்கள் பணியாற்றி உள்ளேன். கிடப்பில் போடப்பட்டிருந்த நான்குவழிச் சாலைப் பணிகளை தொடங்க முயற்சி எடுத்துள்ளேன். இரட்டை ரயில் பாதை பணியை வேகப்படுத்தியுள்ளேன்.

தோ்தல் நேரம் என்பதாலும், அரசியலுக்காகவும் பொன். ராதாகிருஷ்ணன் என் மீது குற்றச்சாட்டுகளை வைக்கிறாா். தோ்தலில் எனக்கு போட்டியாளராக யாரையும் கருதவில்லை. நாங்கள் மிகச் சிறந்த கூட்டணியாக இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளோம். இந்தியா கூட்டணி தமிழகம் முழுவதும் மட்டுமல்ள இந்தியா முழுவதும் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com