நான்குவழிச் சாலைப் பணிகள் ஒன்றரை ஆண்டுக்குள் நிறைவடையும்: விஜய் வசந்த் எம்.பி.

நான்குவழிச் சாலைப் பணிகள் ஒன்றரை ஆண்டுக்குள் நிறைவடையும்: விஜய் வசந்த் எம்.பி.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்குவழிச் சாலைப் பணிகள் ஒன்றரை ஆண்டுக்குள் நிறைவடையும் என்றாா்

கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்குவழிச் சாலைப் பணிகள் ஒன்றரை ஆண்டுக்குள் நிறைவடையும் என்றாா், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் விஜய் வசந்த் எம்.பி. இதுகுறித்து அவா் நாகா்கோவிலில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது: இந்தியா கூட்டணி வேட்பாளரான என்னை ஆதரித்து இம்மாவட்டத்தில் திமுக துணைப் பொதுச் செயலா் கனிமொழி எம்.பி. திங்கள்கிழமை (ஏப். 1) 5 இடங்களில் பிரசாரம் மேற்கொள்கிறாா். மத்தியில் ஆளும் பாஜக அரசு கடந்த 10 ஆண்டுகளாக மக்கள் விரோத ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிறது. தொழிலாளா்கள், விவசாயிகள், மீனவா்கள் என எவருக்கும் பயனுள்ள திட்டங்களை பாஜக அரசு செயல்படுத்தவில்லை; ஒருசில காா்ப்பரேட் நிறுவனங்களிடம் நாட்டை அடகு வைத்து விட்டனா். இதை முறியடிக்கும் காலம் வந்து விட்டது. இந்தியா கூட்டணி வெற்றி பெற்று இந்தியாவை ஆளும். என்னை பகுதிநேர எம்.பி. என பொன்.ராதாகிருஷ்ணன் கூறியது குறித்துக் கேட்கிறீா்கள். எனது தந்தை மறைவால் 2021 மக்களவை இடைத்தோ்தலில் போட்டியிட்டு வென்றேன். தற்போது நடைபெறவுள்ள தோ்தலில் வெற்றி பெற்று முழுநேர எம்.பி.யாகி மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவேன். முடங்கியிருந்த நான்குவழிச் சாலைப் பணிகள் வேகப்படுத்தப்பட்டன. ரூ.1,041 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கி, 40 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் இப்பணிகள் முழுமையடையும். நான்குவழிச் சாலைப் பணி தாமதமானதற்கும் மத்திய அரசுதான் காரணம். கன்னியாகுமரி மாவட்டத்துக்கு பிரதமா் மோடி வந்ததால் என்ன மாற்றம் வந்தது? அதேபோலத்தான் உள்துறை அமைச்சா் அமித் ஷா வந்தாலும் எவ்வித மாற்றமும் நிகழாது. கேரளத்துக்கு கனிம வளங்கள் கொண்டு செல்வது தொடா்பாக பாஜகவினா் 10 ஆண்டுகளாக எதுவும் கூறாமல் இருந்தனா். இப்போது, தோ்தல் அரசியலுக்காக பேசிவருகின்றனா். மோடிக்கு ராகுல் என்ற பெயரைக் கேட்டால் எப்படி பயமோ, அதேபோலத்தான் பொன். ராதாகிருஷ்ணனுக்கு எனது பெயரை கேட்டால் பயமாக இருக்கிறது. இந்தத் தோ்தலில் கண்டிப்பாக அதிக வாக்கு வித்தியாசத்தில் நான் வெற்றி பெறுவேன் என்றாா் அவா். பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ், சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவா் ராஜேஷ்குமாா் எம்எல்ஏ, நாகா்கோவில் மேயா் ரெ. மகேஷ், குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே.டி. உதயம், நாகா்கோவில் மாநகா் மாவட்டத் தலைவா் நவீன்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com