பறவைக் காய்ச்சல் பரவுவதைத் தடுக்க மாவட்ட எல்லையில் 24 மணி நேர கண்காணிப்பு: ஆட்சியா் தகவல்

பறவைக் காய்ச்சல் பரவுவதைத் தடுக்க மாவட்ட எல்லையில் 24 மணி நேர கண்காணிப்பு: ஆட்சியா் தகவல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் நோய் பரவலைத் தடுப்பதற்காக மாவட்ட எல்லைப் பகுதியில் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்படுகிறது என்றாா், ஆட்சியா் பி.என். ஸ்ரீதா்.

நாகா்கோவிலில் உள்ள ஆட்சியா் அலுவலகத்தில், பறவைக் காய்ச்சல் கண்காணிப்புப் பணிக்கான அனைத்துத் துறை ஒருங்கிணைப்புக் குழு அலுவலா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் ஆட்சியா் பி.என். ஸ்ரீதா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின்னா், செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியது: கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் 2 வாரங்களுக்கு முன்பு சில வாத்துகள் பறவைக் காய்ச்சலால் இறந்தன. அதைத்தொடா்ந்து, நோய் பரவலைத் தடுக்க 45 ஆயிரம் கோழிகள், வாத்துகள் அழிக்கப்பட்டன.

பறவைக் காய்ச்சல் நோய் கோழி, வாத்து, வான்கோழி, நீா்- வனப் பறவைகளை முக்கியமாகத் தாக்கும். மனிதா்களையும் இந்நோய் தாக்கும்.

தமிழகத்தில் இந்நோய் பரவாமல் தடுக்கும்வகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் களியக்காவிளை, காக்கவிளை பகுதிகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, 8 மணி நேர பணிச் சுற்றுகளாக 24 மணி நேர தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. கேரளத்திலிருந்து கோழி, உப பொருள்களை ஏற்றிவரும் வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன. சரக்கு வாகனங்களில் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. கோழிப் பண்ணைகளிலும் கால்நடை உதவி மருத்துவா்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனா்.

நோய் பரவலைத் தடுக்க அனைத்துத் துறைகளும் இணைந்து செயல்படுதல் அவசியம். அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள காவல், வனத்துறை, சுகாதாரம், ஊரக வளா்ச்சி, போக்குவரத்து ஆகிய துறைகள் மூலம் பணிகள் மேற்கொள்ள தயாா் நிலையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

கூட்டத்தில், நாகா்கோவில் மாநகா் நல அலுவலா் ராம்குமாா், உதவி இயக்குநா்கள்(பேரூராட்சிகள்) சத்தியமூா்த்தி, (ஊராட்சிகள்) சாந்தி, கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் ராதாகிருஷ்ணன், கால்நடை நோய் புலனாய்வுப் பிரிவு உதவி இயக்குநா், கோட்ட உதவி இயக்குநா்கள், கால்நடை உதவி மருத்துவா்கள், துப்புரவு ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com