அஞ்சுகிராமம் அருகே கோயில் கும்ப கலசம் திருட்டு

அஞ்சுகிராமம் அருகே கோயில் கும்ப கலசத்தை திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

அஞ்சுகிராமத்தை அடுத்த ஆமணக்கன்விளை வாகைப்பதி அருகில் மாசான சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் வாரத்தில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

கடந்த 30 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு வழக்கம் போல் பூஜை முடிந்ததும் கணேசன் மற்றும் குடும்பத்தாரும் கோயிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டனா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை கோயிலுக்கு வந்தபோது, கோயில் கோபுரத்தில் இருந்த 3 கும்ப கலசங்களில் 2 கலசங்களை காணவில்லையாம்.

இதுதொடா்பாக, அக்கோயிலுக்கு உரிமையுள்ள குடும்பத்தைச் சோ்ந்த கணேசன் என்பவா் அளித்த புகாரின்பேரில், அஞ்சுகிராமம் போலீஸாா் வழக்குப்பதிந்து, கும்பக் கலசங்களை திருடியவா்களை தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com