மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் திடீா் பள்ளம்

மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் திடீா் பள்ளம்

மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் செவ்வாய்க்கிழமை திடீா் பள்ளம் ஏற்பட்டது. இதன்காரணமாக, போக்குவரத்து தடை செய்யப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

மாா்த்தாண்டத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வுகாணும் வகையில் முன்னாள் மத்திய இணையமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன் பதவிக் காலத்தில் மாா்த்தாண்டம் அருகே வெட்டுவெந்நி பகுதியில் குழித்துறை தாமிரவருணி ஆற்றுப்பாலம் அருகிலிருந்து பம்மம் பகுதி வரை 2.5 கி.மீ. தொலைவுக்கு இரும்பு மேம்பாலம் அமைக்கப்பட்டது. இப்பாலம் 2018ஆம் ஆண்டு டிச. 18முதல் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது. இதன்வழியே கனரக லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில் மேம்பாலம் தொடங்கும் பம்மம் பகுதியருகேயுள்ள சாலையில் செவ்வாய்க்கிழமை காலையில் பெரிய அளவிலான பள்ளம் ஏற்பட்டது. இதன்காரணமாக, மேம்பாலப் பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டதால், போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

இந்த மேம்பால சாலையை முறையாக பராமரித்து போக்குவரத்துக்கு திறக்கவும், இவ்வழியே அதிக பாரம் ஏற்றிச் செல்லும் கனரக லாரிகளுக்கு தடைவிதிக்கவும் வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com