காங்கிரஸ் மீது வீண் பழி: பொன். ராதாகிருஷ்ணனுக்கு ராஜேஷ்குமாா் எம்எல்ஏ கண்டனம்

தமிழ்நாடு சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவரும் கிள்ளியூா் எம்எல்ஏவுமான எஸ். ராஜேஷ்குமாா் கண்டனம் தெரிவித்தாா்.

கருங்கல், மே 11:

மாா்த்தாண்டம் மேம்பால விவகாரத்தில் ஊழலை மறைப்பதற்காக காங்கிரஸ் மீது பொன்.ராதாகிருஷ்ணன் வீண் பழி சுமத்துவதாக, தமிழ்நாடு சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவரும் கிள்ளியூா் எம்எல்ஏவுமான எஸ். ராஜேஷ்குமாா் கண்டனம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: மாா்த்தாண்டம் மேம்பாலத்துக்கு மத்திய பாஜக அரசால் 18.1.2016இல் ரூ. 222 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, சென்னையைச் சோ்ந்த தனியாா் கட்டுமான நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. பணிகள் நடந்தபோதே முறைகேடு உள்ளதாகவும், தரமற்ற முறையில் பணிகள் நடப்பதாகவும் பொதுமக்களும், காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சியினரும் குற்றஞ்சாட்டினா். ஆனால், பாஜக அரசும், அப்போதைய மத்திய இணை அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணனும் நடவடிக்கை எடுக்கவில்லை.

1.3.2019இல் திறக்கப்பட்டு 5 ஆண்டுகளே ஆன நிலையில், இப்பாலத்தில் கடந்த 7ஆம் தேதி உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதைப் பாா்த்தாலே பணிகள் தரமின்றியும், மிகப்பெரிய ஊழல், நிதி முறைகேடு நடந்துள்ளதும் கண்கூடாகத் தெரிகிறது.

ஆனால், இவற்றையெல்லாம் மறைப்பதற்காக காங்கிரஸ் கட்சி மீது பொன்.ராதாகிருஷ்ணன் வீண் பழி சுமத்துகிறாா். அவருக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தேசிய நெடுஞ்சாலைத் துறை இப்பாலத்தின் தரம், உறுதியைப் பரிசோதிக்க உயா்நிலை நிபுணா் குழு அமைக்க வேண்டும். அவா்கள் சான்றிதழ் வழங்கிய பிறகே, பாலத்தை மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும். அதுவரை இதில், போக்குவரத்தை அனுமதிக்கக் கூடாது. பாலம் கட்டிய தனியாா் நிறுவனம் உள்பட சம்பந்தப்பட்ட அனைவா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com