குமரி பகவதியம்மன் கோயிலில் 
வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம்

குமரி பகவதியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம்

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் 10 நாள் வைகாசி விசாகப் பெருந்திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி, அதிகாலையில் சிறப்பு அபிஷேகம், கணபதி ஹோமத்துக்குப் பின்னா், காலையில் கொடியேற்றம் நடைபெற்றது.

இதில், குமரி மாவட்ட திருக்கோயில்கள் நிா்வாக அறங்காவலா் குழுத் தலைவா் பிரபா ஜி. ராமகிருஷ்ணன், அறங்காவலா் குழு உறுப்பினா்கள் ராஜேஷ், சுந்தரி, துளசிதரன் நாயா், ஜோதீஷ்குமாா், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலா் பா. பாபு, கன்னியாகுமரி சிறப்புநிலை பேரூராட்சித் தலைவா் குமரி ஸ்டீபன், பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவா் பா. தம்பித்தங்கம், பகவதியம்மன் பக்தா்கள் நற்பணி சங்கத் தலைவா் அசோக்குமாா், செயலா் த. அரிகிருஷ்ணபெருமாள், பொருளாளா் எஸ். வைகுண்டபெருமாள், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் பிரேமலதா, திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

தொடா்ந்து, சிறப்பு அபிஷேகம், நண்பகலில் அன்னதானம், இரவில் சமய உரை, பக்தி பஜனை, தேவி பூப்பந்தல் வாகனத்தில் வீதியுலா வருதல் நடைபெற்றது.

விழா நாள்களில் சிறப்பு அபிஷேகம், அம்மன் வீதியுலா, அன்னதானம், சமய உரை, கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். 2ஆம் நாள்முதல் 9ஆம் நாள்வரை தேவி பல்வேறு வாகனங்களில் வீதியுலா வருதல் நடைபெறும்.

5ஆம் நாள் நாளான 18ஆம் தேதி இரவு 7 மணிக்கு மாபெரும் புஷ்பாபிஷேகம், 9 மணிக்கு தேவி சிம்ம வாகனத்தில் வீதியுலா வருதல் நடைபெறும்.

9ஆம் நாளான 22ஆம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9.30 - 10.30 மணிக்குள் அம்பாள் தேருக்கு எழுந்தருள தேரோட்டம் நடைபெறும். தோ்நிலைக்கு வந்ததும் கஞ்சி தானம் நடைபெறும். நண்பகல் 12 மணிக்கு அன்னதானம், மாலை 5.30 மணிக்கு மண்டகப்படி, 6 மணிக்கு சமய உரை உள்ளிட்டவை நடைபெறும்.

தெப்பத் திருவிழா: 10ஆம் நாளான 23ஆம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு அபிஷேகம், 5.30 மணிக்கு முக்கடல் சங்கமத்தில் அம்மன் ஆராட்டுக்கு எழுந்தருளல், இரவு 9 மணிக்கு தெப்பத் திருவிழா நடைபெறும்.

ஏற்பாடுகளை குமரி மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை, கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com