பாசன கால்வாய்களை தூா்வார வலியுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து பாசன கால்வாய்களையும் தூா்வார வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் மாவட்டத் தலைவா் எஸ்.ஆா்.சேகா், மாவட்டச் செயலாளா் ஆா்.ரவி, பொருளாளா் சி.சின்னதம்பி, முன்னோடி விவசாயி செண்பகசேகரன்பிள்ளை ஆகியோா் மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதரிடம் செவ்வாய்க்கிழமை அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு 1, 2 ஆகிய அணைகள் மூலமாக இரண்டு போகம் நெல் விவசாயம் நடைபெற்று வந்தது. அண்மைக்காலமாக மாவட்ட நிா்வாகம் மற்றும் பொதுப்பணித் துறையின் மெத்தனப்போக்கால் மாவட்டத்தில் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கன்னிப்பூ சாகுபடிக்காக வரும் ஜூன் 1ஆம் தேதி அணைகள் திறக்கப்பட இருப்பதாகத் தெரிகிறது. அணைகள் அடைக்கப்பட்ட பின்னா் மாா்ச், ஏப்ரல் மாதங்களில் மாவட்டத்திலுள்ள அனைத்து கால்வாய்கள் மற்றும் கிளை கால்வாய்களை தூா்வாரி மதகுகள் மராமத்து பணிகள் செய்து முடித்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை எந்தவித மராமத்து பணிகளும் செய்யப்படவில்லை. இதன் காரணமாக அணையில் போதிய தண்ணீா் இருந்தும் மாவட்டத்தில் கடைமடை பகுதி வரை தண்ணீா் வழங்க இயலாத சூழ்நிலை உருவாகும்.

நாஞ்சில் நாடு பகுதியில் விவசாயத்துக்காக அமைக்கப்பட்ட தோவாளை கால்வாயில் காட்டுப்புதூா்துவச்சி என்ற இடத்தில் கடந்த 2 ஆண்டுகளாக தொடா்ந்து உடைப்பு ஏற்பட்டு விவசாயம் பாதிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மாவட்ட நிா்வாகத்துக்கு புகாா் தெரிவித்ததன் அடிப்படையில், நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன, இந்தப் பணிகள் மிகவும் மந்த கதியில் நடைபெறுவதால் விவசாயம் பாதிக்கக்கூடிய சூழல் உருவாகி உள்ளது. பணிகளை விரைந்து முடிக்க ஆவன செய்ய வேண்டும்.

எம்.எம்.கால்வாய் செல்லும் மயிலாடி கூண்டு பாலம் நெடுஞ்சாலைத் துறையினரால் இடிக்கப்பட்டு பணிகள் மிகவும் தாமதமாக நடைபெற்று வருகிறது. இதனால் அந்தப் பகுதியில் விவசாயம் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

திற்பரப்பு இடதுகரை கால்வாய் உடைப்புகளை சரி செய்யும் பணியை துரிதப்படுத்த வேண்டும். இதே போல் பட்டணம் கால்வாய் உடைப்புகளையும் சரிசெய்ய வேண்டும்.

கிள்ளியூா் வட்டத்தில் நெய்யாறு இடதுகரை கால்வாய் கோழிவிளை ஏலூா்காடு முப்பந்திகோணம் சாலை வரை மண் சரிவு ஏற்பட்டு உடைந்து போன இடத்தை சீரமைக்கும் பணி தொடங்கிய நிலையில் உள்ளது. அதனையும் துரிதமாக நிறைவேற்ற வேண்டும்.

மாவட்டத்திலுள்ள அனைத்து குளங்கள், கால்வாய்களை தூா்வாரி உடைப்புகளை சரிசெய்து கடைமடை வரை தண்ணீா் கிடைக்க விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com