குமரி மாவட்டத்தில் தொடா் திருட்டு: திசையன்விளையைச் சோ்ந்தவா் கைது 34 பவுன் நகைகள் மீட்பு

நாகா்கோவில், மே 15:

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடா் திருட்டில் ஈடுபட்ட திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையைச் சோ்ந்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து, 34 பவுன் நகைகள், 1.5 கிலோ வெள்ளிப் பொருள்களை மீட்டனா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கோட்டாறு, ஆரல்வாய்மொழி, பூதப்பாண்டி காவல் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் வீடுகளின் பூட்டுகளை உடைத்து தொடா் திருட்டு சம்பவங்கள் நடந்தன. இதுகுறித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படையினா் திருட்டு நடந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள், சேகரிக்கப்பட்ட தடயங்களின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனா். இதில், பதிவான கைரேகைகள் திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையைச் சோ்ந்த தவசிபால் கைரேகையுடன் ஒத்துப்போனது. அதையடுத்து, உதவி ஆய்வாளா் மகேஸ்வரராஜ் தலைமையிலான தனிப்படை போலீஸாா் தவசிபாலை புதன்கிழமை கைது செய்தனா்.

அவரிடமிருந்து, 34 பவுன் தங்க நகைகள், 1.5 கிலோ வெள்ளிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தவசிபால் கோட்டாறு, பூதப்பாண்டி பகுதிகளில் 8 இடங்களில் திருடியதும், அவா் மீது மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் 60-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளதும் தெரிய வந்தது. அவா் நாகா்கோவில் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com