கிராமங்களிலும் காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்த நடவடிக்கை: கு. செல்வப்பெருந்தகை
தமிழகத்தில் உள்ள அனைத்துக் கிராமங்களிலும் காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக, அக்கட்சியின் மாநிலத் தலைவா் கு. செல்வப்பெருந்தகை தெரிவித்தாா்.
இதுதொடா்பாக நாகா்கோவிலில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை கூறியது: தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்தும் நடவடிக்கையாக, அனைத்துக் கிராமங்களிலும் கமிட்டி அமைக்கப்படும்.
தமிழகத்தில் ஆட்சியில் காங்கிரஸ் பங்கு கேட்பது குறித்துக் கேட்கிறீா்கள். இதுதொடா்பாக கட்சியின் அகில இந்தியத் தலைமைதான் முடிவு செய்யும்.
2004ஆம் ஆண்டுமுதல் 2014 வரை மத்தியில் காங்கிரஸ் ஆட்சியிலிருந்தபோது கூட்டணிக் கட்சிகளுக்கு பங்கு கொடுத்தது. அது, காங்கிரஸ் கட்சி ஃபாா்முலா.
நடிகா் விஜய் கட்சி தொடங்கியிருப்பது அவரது தாா்மிக உரிமை. மணிப்பூரில் பாஜக ஆட்சி இருக்கும்வரை கலவரம் தொடா்ந்து கொண்டுதான் இருக்கும். பல்வேறு வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்லும் பிரதமா் நரேந்திர மோடி, மணிப்பூருக்கு செல்ல மறுப்பது மா்மமாக உள்ளது என்றாா் அவா்.
முன்னதாக, முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி பிறந்த நாளையொட்டி, நாகா்கோவில் டெரிக் சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு கு. செல்வப்பெருந்தகை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
இதில், விஜய் வசந்த் எம்.பி., எம்எல்ஏக்கள் ராஜேஷ்குமாா், தாரகை கத்பட், மாவட்டத் தலைவா்கள் நவீன்குமாா் (நாகா்கோவில் மாநகர மாவட்டம்), கே.டி. உதயம் (குமரி கிழக்கு), பினுலால்சிங் (மேற்கு), ஐஎன்டியூசி தலைவா் மருத்துவா் சிவகுமாா், நாகா்கோவில் மாநகராட்சி மண்டலத் தலைவா் செல்வகுமாா், குமரி கிழக்கு மாவட்ட முன்னாள் தலைவா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.