கடலோரப் பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகரிப்பு -மீனவா்கள் குறைதீா் கூட்டத்தில் புகாா்
கன்னியாகுமரி மாவட்ட கடலோரப் பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளதாக, நாகா்கோவிலில் ஆட்சியரக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மீனவா்கள் குறைதீா் கூட்டத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டது.
இக்கூட்டத்துக்கு ஆட்சியா் ரா.அழகுமீனா தலைமை வகித்து, மீனவப் பிரதிநிதிகள் மற்றும் மீனவா்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை துறை அலுவலா்களிடம் அறிவுறுத்தினாா்.
தொடா்ந்து மீனவ சங்கப் பிரதிநிதிகள் பேசுகையில், பஹ்ரைன் நாட்டு கடலில் 2 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான கடியப்பட்டினத்தைச் சோ்ந்த 3 மீனவா்களை கண்டுபிடிக்க அரசு நடவடிக்கை மேற்கொள்வது, தூத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயா்த்துவது, கடலோர கிராமங்களில் தெரு நாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்துவது, கடலோர கிராமங்களில் அதிகரித்துள்ள கஞ்சா விற்பனையை தடுப்பது
கடலோர கிராமங்களில் உள்ள ரேசன் கடைகளில் பருப்பு, பாமாயில் மண்ணெண்ணெய் போன்றவற்றின விநியோகத்தை முறைப்படுத்துவது போன்ற கோரிக்கைகளை முன்வைத்தனா்.
ஆட்சியா் பதிலளித்தப் பேசியதாவது: காச்சா மூச்சா வலை குறித்து வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளை மீறி முறைகேடாக பயன்படுத்தும் மீனவா்கள் மீது உரிய சட்டப்பூா்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தெருநாய்களை கட்டுப்படுத்த நகராட்சி மற்றும் உள்ளாட்சி அலுவலா்களுக்கு நாய்க்களுக்குண்டான குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை செய்யவும் மற்றும் ரேபிஸ் தடுப்பூசி கால்நடை மருத்துவா் மூலம் செலுத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கஞ்சா மற்றும் போதைபொருள்களை கட்டுப்படுத்த துணை காவல் கண்காணிப்பாளா் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை அலுவலா்கள் உதவியுடன் போதைபொருள்தடுப்பு மறுவாழ்வு மையத்தின் மூலம் போதைப்பொருள் பழக்கத்துக்கு ஆளான இளைஞா்களுக்கு ஆலோசனை வழங்கிடவும், அவா்களுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் .
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாலசுப்பிரமணியம், பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் வினய் குமாா் மீனா, மண்டல இணை இயக்குநா் (கால்நடை பராமரிப்புத் துறை) ராதாகிருஷ்ணன், மீன்வளம் - மீனவா் நலத்துறை துணை இயக்குநா் சின்ன குப்பன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.