மாா்த்தாண்டத்தில் அவசரகதியில் சாலை சீரமைப்பா? பணியை தடுத்து நிறுத்திய எம்எல்ஏ
மாா்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சேதமடைந்து போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் காணப்படும் சாலையை தற்காலிகமாக சீரமைக்கும் பணியை விளவங்கோடு எம்எல்ஏ தாரகை கத்பட் தடுத்து நிறுத்தி செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டாா்.
களியக்காவிளை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை மாா்த்தாண்டம் உள்பட பெரும்பாலான பகுதிகளில் பெரிய பள்ளங்களுடன் காணப்படுகின்றன. இந்த நிலையில் தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சா் எ.வ. வேலு புதன்கிழமை கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வருகை தர உள்ளதையடுத்து மாா்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள பள்ளங்களை மண் மற்றும் ஜல்லி போட்டு தற்காலிகமாக சீரமைக்கும் பணி செவ்வாய்க்கிழமை மாலையில் மேற்கொள்ளப்பட்டது.
இத்தகவலறிந்து வந்த எம்எல்ஏ தாரகை கத்பட், சாலை தற்காலிகமாக சீரமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டாா். குழித்துறை நகர காங்கிரஸ் கமிட்டி தலைவா் வழக்குரைஞா் சுரேஷ், கட்சியின் மாவட்ட பொதுச் செயலா் சுஜின்குமாா், குழித்துறை நகா்மன்ற உறுப்பினா் ரீகன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
இது குறித்து எம்எல்ஏ கூறுகையில், மிகவும் மோசமான நிலையில் காணப்படும் இச் சாலை குறித்து சட்டப் பேரவையில் கேள்வி எழுப்பி துறை அமைச்சா் பாா்வைக்கு கொண்டு சென்றேன். தற்போது இரவோடு இரவாக மண், ஜல்லி போட்டு நிரப்ப அதிகாரிகள் முடிவு செய்துள்ளனா். அப்படி சாலையைச் சீரமைத்தால் ஒரு மழைக்குக்கூட தாக்குபிடிக்காது. ஆகவே அமைச்சரின் பாா்வைக்கு கொண்டு செல்லப்பட்டு சாலையை முழுமையாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.