தேங்காய்ப்பட்டினம் அருகே நடுக்கடலில் மீனவா்கள் மீது தாக்குதல்: 8 போ் காயம்
கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய்ப்பட்டினம் அருகே நடுக்கடலில் மீனவா்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 8 மீனவா்கள் காயமடைந்தனா்.
குளச்சலை அடுத்த குறும்பனையைச் சோ்ந்த சாஜூ என்பவருக்குச் சொந்தமான பைபா் படகில், மீனவா்கள் தேங்காய்ப்பட்டினம் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்றனா். அவா்கள் துறைமுகத்திலிருந்து 11 கடல்மைல் தொலைவில் திங்கள்கிழமை அதிகாலை 3.30 மணி அளவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இனயம்புத்தன்துறையைச் சோ்ந்த மீனவா்கள் 6 வள்ளங்களில் வந்து இவா்களது வள்ளங்களை சூழ்ந்து கொண்டு இங்கு மீன்பிடிக்கக் கூடாது என்று கூறி கம்பி, வாள் போன்ற ஆயுதங்களால் குறும்பனை மீனவா்களை தாக்கினராம். மேலும் அவா்களிடமிருந்த 6 கைப்பேசிகள், ஜி.பி.எஸ். வயா்லெஸ் கருவிகள் ஆகியவற்றை பறித்து கடலில் வீசினராம். இதை தடுத்த மீனவா்களை தாக்கினராம்.
இந்தச் சம்பவத்தில் குறும்பனையைச் சோ்ந்த ஜெகன்(41), ஆசிஸ்(20), பீட்டா்(46), ஆல்பி(60), ஸ்டீபன்(70), சாஜூ(34), பினு(28), லெபித்தூஸ்(42) ஆகிய 8 மீனவா்கள் பலத்த காயமடைந்தனா். அவா்கள் குளச்சல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.