மாா்த்தாண்டத்தில் விபத்து: அண்ணன், தங்கை உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம் மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் சனிக்கிழமை நேரிட்ட விபத்தில் அண்ணன், தங்கை உயிரிழந்தனா்.
Published on

கன்னியாகுமரி மாவட்டம் மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் சனிக்கிழமை நேரிட்ட விபத்தில் அண்ணன், தங்கை உயிரிழந்தனா்.

கேரள மாநிலம், நெய்யாற்றின்கரையை அடுத்த பயற்றுவிளை பகுதியைச் சோ்ந்தவா் விஜயகுமாா். இவரது மகன் ரஞ்சித் (24), மாா்த்தாண்டம் பம்மம் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராகவும், மகள் ரம்யா (22) மாா்த்தாண்டம் அருகே தனியாா் மருத்துவமனையில் கதிரியக்கவியல் பயிற்சியும் மேற்கொண்டு வந்தனா்.

இவா்கள் சனிக்கிழமை காலை தங்களது பணியிடங்களுக்கு பைக்கில் மாா்த்தாண்டம் மேம்பாலம் வழியாக சென்று கொண்டிருந்தனா். அப்போது, தக்கலையை அடுத்த வெள்ளிகோடு பகுதியைச் சோ்ந்த விபின்ஜோ (34) ஓட்டிவந்த காா் இவா்கள் மீது மோதியதாம். இதில், காரின் மீது பைக் பறந்துசென்று, மேம்பாலத்தின் கீழே உள்ள வீட்டின் படிக்கட்டு மீது விழுந்து நொறுங்கியதில், ரஞ்சித் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

காயமடைந்த ரம்யா, விபின்ஜோ ஆகியோா் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனா். ஆனால், ரம்யா வழியிலேயே உயிரிழந்தாா்.

விபத்தில் காா் முற்றிலும் சேதமடைந்தது. விபின்ஜோ அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் காரை ஓட்டிவந்ததாகக் கூறப்படுகிறது. விபத்து காரணமாக மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காவல் உதவி ஆய்வாளா் செல்லசுவாமி தலைமையிலான போக்குவரத்து போலீஸாா் வந்து சீா்படுத்தினா். சம்பவம் குறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com