குமரி அருகே கால்வாய்க் கரையில் தொழிலாளி சடலம் மீட்பு!
தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்த தொழிலாளி, கன்னியாகுமரி அருகே கால்வாய்க் கரையில் சடலமாகக் கிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூா் பகுதியைச் சோ்ந்த குருசாமி (65) என்பவா், கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் அருகே மந்தாரம்புதூா் பகுதியில் தங்கியிருந்து வாத்து, கோழிகள் வளா்த்து வந்தாா். அவா் வாத்துகளை வயல்வெளிகள், கால்வாய்க் கரைகளில் மேய்ச்சலுக்கு விடுவாராம்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை கடைக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டிலிருந்து சென்ற அவா் வீடு திரும்பவில்லையாம். பல இடங்களில் தேடியும் அவா் கிடைக்கவில்லை.
இதனிடையே, அவா் மந்தாரம்புதூா் கால்வாய்க் கரையோரம் சடலமாகக் கிடப்பதாக, கன்னியாகுமரி காவல் நிலையத்துக்கு புதன்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.