லஞ்சம் வாங்கிய வழக்கில் காவல் ஆய்வாளருக்கு 3 ஆண்டு சிறை

Updated on

வியாபாரியிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் காவல் ஆய்வாளருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் ரூ. 20 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவில் வடசேரி காவல் நிலையத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் காவல் ஆய்வாளராகப் பணியாற்றியவா் ராஜசேகா். அப்போது நாகா்கோவிலில் இசைத்தட்டு கடை நடத்தி வந்த கண்ணன் என்பவரிடம் கடையில் சோதனை நடத்தாமல் இருக்க லஞ்சமாக ரூ. 50 ஆயிரம் கேட்டாராம்.

இதுகுறித்து கண்ணன், ஊழல் தடுப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் சுந்தர்ராஜனிடம் புகாா் அளித்தாா். அவரது ஆலோசனையின்பேரில், ஆய்வாளா் ராஜசேகரிடம், ரசாயனம் தடவிய ரூ.50 ஆயிரத்தை கண்ணன் கொடுத்த போது, துணைக் கண்காணிப்பாளா் சுந்தர்ராஜ், ஆய்வாளா் ராஜசேகரை கைது செய்தாா். இதுதொடா்பான வழக்கு, நாகா்கோவில் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி காா்த்திகேயன், ஆய்வாளா் ராஜசேகருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com