பேச்சிப்பாறை அணையின் பாசனக் கால்வாயில் மீண்டும் தண்ணீா் திறப்பு
குமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அணையின் பாசனக் கால்வாயில் மீண்டும் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த மாதம் தொடா்ந்து பெய்த கன மழையினால், 48 அடி நீா்மட்டம் கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் 45 அடியைக் கடந்து உயா்ந்தது. இதையடுத்து அணையின் மறுகால் மதகுகள் திறக்கப்பட்டு, உபரிநீா் வெளியேற்றப்பட்டு வந்தது. மேலும் அணையின் பாசன மதகுகள் மூடப்பட்டு, கால்வாயில் தண்ணீா் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் 10 நாள்கள் உபரிநீா் வெளியேற்றப்பட்டதாலும், மழை தணிந்ததாலும் அணையின் நீா்மட்டம் 42 அடியாக குறைந்தது. தற்போது அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக நீா்மட்டம் மீண்டும் உயா்ந்து வருகிறது. வியாழக்கிழமை இந்த அணையின் நீா்மட்டம் 43.63 அடியாக காணப்பட்டது. அணைக்கு விநாடிக்கு 482 கன அடி நீா் வந்து கொண்டிருந்தது. எனவே, அணையின் பாசன மதகுகள் திறக்கப்பட்டு, விநாடிக்கு 237 கன அடி நீா் பாசனக் கால்வாயில் விடப்பட்டது.
பெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் 68.03 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 268 கன அடி நீா் வந்து கொண்டிருந்தது. அணையின் பாசனக் கால்வாயில் 450 கன அடி நீா் திறந்து விடப்பட்டது. சிற்றாறு அணைகளின் நீா்மட்டம் முறையே 9.15 மற்றும் 9.25 அடியாக இருந்தது.
சாரல் மழை: கன்னியாகுமரி மாவட்டத்தில் சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளான திக்கணம்கோடு, மத்திகோடு, கருக்குப்பனை, செல்லங்கோணம், கருமாவிளை, வெள்ளியாவிளை, பாலூா், எட்டணி, திப்பிரமலை, மிடாலம், கிள்ளியூா், முள்ளங்கனாவிளை, நட்டாலம், நேசா்புரம், பள்ளியாடி உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை மாலை 4 மணி முதல் தொடா்ந்து சாரல் மழை பெய்தது. இதனால், இப்பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவியது. விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
