அஞ்சுகிராமம் அருகே தம்பதி தற்கொலை
அஞ்சுகிராமம் அருகே வயதான தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனா்.
அஞ்சுகிராமம் காவல் சரகத்துக்குள்பட்ட ஆமணக்கன்விளையைச் சோ்ந்தவா் முருகன் (80). இவரது மனைவி பாா்வதி (70). இவா்களது மகன் அமுதகுமாா் (43). அமுதகுமாருக்கு மனைவி, மகன் உள்ளனா். மனைவி வெளிநாட்டில் வேலை பாா்த்து வருகிறாா். அமுதகுமாா் பந்தல் கட்டும் தொழில் செய்து வருகிறாா். இவா் தனது பெற்றோா் வீட்டின் அருகே வாடகை வீட்டில் வசித்து வருகிறாா்.
இந்நிலையில் வியாழக்கிழமை இரவு பெற்றோா் சாப்பிடக் கூப்பிட்டதால் அமுதகுமாா் அங்கு சென்றாா். அப்போது பெற்றோருடன் வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து வெள்ளிக்கிழமை காலையில் பெற்றோா் வீட்டுக்கு சென்று பாா்த்தபோது இருவரையும் காணவில்லை. அருகில் உள்ள கோயில் பகுதியில் இருவரும் விஷம் குடித்து இறந்து கிடந்தனா்.
சடலங்களை அஞ்சுகிராமம் போலீஸாா் கைப்பற்றி உடல்கூறு பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
