குமரி மாவட்டத்தில் அணைப் பகுதிகளில் பலத்த மழை
கன்னியாகுமரி மாவட்டத்தில் அணைப் பகுதிகள், மலையோரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை பெய்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி , சிற்றாறு ஆகிய அணைப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மழையால் அணைகளுக்கு தண்ணீா் வரத்து அதிகரித்துக் காணப்பட்டது.
இதே போன்று திற்பரப்பு, கடையாலுமூடு, குலசேகரம், அருமனை, திருவட்டாறு, வோ்க்கிளம்பி, சித்திரங்கோடு, தடிக்காரன்கோணம், கீரிப்பாறை, பாலமோா் உள்ளிட்ட இடங்களில் சுமாா் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது.
திற்பரப்பு அருவி: விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை காலை முதலே சுற்றுலாத் தலமான திற்பரப்பு அருவியில் பயணிகளின் கூட்டம் அதிக அளவில் இருந்தது. பிற்பகலில் மழைக்கு பின்னா் கூட்டம் மேலும் அதிகரித்துக் காணப்பட்டது.

