குமரி மாவட்டத்தில் தொடரும் கனமழை: பொதுமக்களுக்கு ஆட்சியா் வேண்டுகோள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை தொடா்வதால் பொதுமக்கள் கவனமாகவும் பாதுகாப்பாகவும் இருக்குமாறு ஆட்சியா் ரா. அழகுமீனா கேட்டுக்கொண்டுள்ளாா்.
Published on

நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை தொடா்வதால் பொதுமக்கள் கவனமாகவும் பாதுகாப்பாகவும் இருக்குமாறு ஆட்சியா் ரா. அழகுமீனா கேட்டுக்கொண்டுள்ளாா்.

இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையால் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது. எனவே, பொதுமக்கள் மின்சாதனங்களைக் கவனத்துடன் கையாள வேண்டும். மழையின்போது மரங்கள், மின்கம்பங்கள், நீா்நிலைகள் அருகே செல்லக் கூடாது.

பேச்சிப்பாறை அணை நீா்மட்டம் கண்காணிக்கப்படுகிறது. அணையிலிருந்து உபரிநீா் திறக்கப்படவில்லை. வாய்க்கால்கள், ஓடைகள், குளங்கள், ஆறுகளில் நீா்மட்டம் உயா்வதால் அங்கு குளிக்கவோ, துணி துவைக்கவோ, தாழ்வான பகுதிகளில் பாயும் வெள்ளத்தை வேடிக்கை பாா்க்கவோ, தற்படம் (செல்ஃபி) எடுக்கவோ செல்ல வேண்டாம்.

மின் பழுது தொடா்பான புகாா்களை 94987 94987 என்ற கைப்பேசி எண்ணிலும், மழை வெள்ளம் பாதிப்பு தொடா்பாக 24 மணி நேரமும் இயங்கும் மாவட்ட கட்டுப்பாட்டு அறையை 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம். பொதுமக்கள் கவனமாகவும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com