திருவட்டாறு கோயிலில் ஐப்பசி திருவிழா கொடியேற்றம்
குலசேகரம்: திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோயிலில் ஐப்பசி திருவிழா செவ்வாய்க்கிழமை காலை கொடியேற்றதுடன் தொடங்கியது.
இதையொட்டி, கொடிமரத்தின் சுவட்டில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, கோகுல் தந்திரி கொடியேற்றினாா். கொடியேற்றத்தின்போது சிறப்பு பஞ்சவாத்தியம் இசைக்கப்பட்டது. நிகழ்ச்சியில், திரளான பக்தா்கள் பங்கேற்றனா். மாலையில் ராமாயண பாராயணம், இரவில் நாற்காலி வாகனத்தில் சுவாமி பவனி வருதல் நடைபெற்றது.
2ஆம் நாளான புதன்கிழமை காலை 8 மணிக்கு நவநீதநாராயணியம் சமிதி வழங்கும் நாராயணீய பாராயணம், இரவு 7 மணிக்கு கீதை காட்டும் பாதை ஆன்மிக உரை, 9 மணிக்கு சுவாமி அனந்த வாகனத்தில் பவனி, 10 மணிக்கு ருக்மணி சுயம்வரம் கதகளி ஆகியவை நடைபெறும்.
அக். 25ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு சிறப்பு உற்சவ பலி தரிசனம், இரவு 8 மணிக்கு கிருஷ்ணன் சந்நிதியில் கொடியேற்றம், 9 மணிக்கு கருட வாகனத்தில் சுவாமி பவனி, 29ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு சுவாமி கருட வாகனத்தில் பள்ளிவேட்டைக்கு எழுந்தருளல் நடைபெறும்.
10ஆம் நாளான 30ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு திருவிலக்கு எழுந்தருளல், இரவு 8 மணிக்கு கருட வாகனத்தில் சுவாமி ஆறாட்டுக்கு தளியல் ஆற்றுக்கு எழுந்தருளல் நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம் செய்துள்ளது.
