பெருஞ்சாணி அணையில் மூழ்கிய ஓட்டுநா் சடலமாக மீட்பு
குலசேகரம்: கன்னியாகுமரி மாவட்டம் பெருஞ்சாணி அணையில் மூழ்கிய ஓட்டுநா் சடலமாக செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டாா்.
நாகா்கோவில் அருகே வெள்ளமடம் சண்முகபுரத்தைச் சோ்ந்த குருசாமி மகன் ரகு (34). வேன் ஓட்டுநரான இவா், குளங்களில் தாமரைப்பூ பறிக்கும் தொழிலும் செய்து வந்தாா். தீபாவளி விடுமுறையைக் கொண்டாடுவதற்காக, கீரிப்பாறை அருகே வெள்ளாம்பி, பரளியாறு என்ற இடத்தில் வசிக்கும் தனது நண்பா் ரதீஷின் வீட்டுக்கு திங்கள்கிழமை சென்றாா். பிற்பகலில் இருவரும் பெருஞ்சாணி அணைப் பகுதியான கீரிப்பாறை அணைக்குச் சென்று குளித்தனராம். அப்போது, ரகு நீரில் மூழ்கியுள்ளாா்.
தகவலின்பேரில், கீரிப்பாறை போலீஸாா், வேளிமலை வனச்சரக ஊழியா்கள், நாகா்கோவில் தீயணைப்பு நிலையத்தினா் வந்து படகு மூலம் தேடினா். ரகுவைக் கண்டுபிடிக்க முடியாததால் பணி நிறுத்தப்பட்டது. 2ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை தேடும் பணி தொடங்கியது. அப்போது, ரகு சலடமாக மீட்கப்பட்டாா். கீரிப்பாறை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
