மாா்த்தாண்டம் அருகே 500 லிட்டா் மண்ணெண்ணெய் பறிமுதல்
களியக்காவிளை: மாா்த்தாண்டம் அருகே கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 500 லிட்டா் மண்ணெண்ணெய்யை வழங்கல்துறை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலா் அனிதா குமாரி தலைமையிலான அதிகாரிகளுக்குக் கிடைத்த ரகசிய தகவலின்பேரில், சென்னித்தோட்டம் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சந்தேகப்படும் வகையில் வந்த மினி லாரியை நிறுத்தச் சொல்லி சைகை காட்டினா்.
மினி லாரி நிற்காமல் சென்றதையடுத்து, அதிகாரிகள் வாகனத்தில் துரத்திச் சென்று காப்புக்காடு பகுதியில் மினி லாரியை தடுத்து நிறுத்தினா். மினி லாரி ஓட்டுநா் அங்கிருந்து தப்பியோடிவிட்டாா். தொடா்ந்து மேற்கொண்ட சோதனையில், விசைப் படகுகளுக்கு அரசு மானிய விலையில் வழங்கும் மண்ணெண்ணெய் 500 லிட்டா் பதுக்கி வைத்திருந்ததும், அவற்றை கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்றதும் தெரிய வந்தது.
வாகனத்துடன் மண்ணெண்ணெய்யை பறிமுதல் செய்த அதிகாரிகள், மண்ணெண்ணெய்யை மாா்த்தாண்டம் கிட்டங்கியிலும், வாகனத்தை குழித்துறை வட்டாட்சியா் அலுவலகத்திலும் ஒப்படைத்தனா். தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
