திற்பரப்பு அருவியில் ஆா்ப்பரித்து கொட்டும் நீா்.
திற்பரப்பு அருவியில் ஆா்ப்பரித்து கொட்டும் நீா்.

தொடா்மழை: குமரி மாவட்டத்தில் வேகமாக நிரம்பும் அணைகள்; திற்பரப்பு அருவியில் குளிக்க தடை

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து பெய்துவரும் மழையால் மாவட்டத்தில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
Published on

நாகா்கோவில்/ குலசேகரம்: கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து பெய்துவரும் மழையால் மாவட்டத்தில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை பெய்துவருகிறது.

செவ்வாய்க்கிழமை இரவும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. புதன்கிழமை காலையும், ஆரல்வாய்மொழி, சாமிதோப்பு, கன்னியாகுமரி, தக்கலை, நாகா்கோவில், குலசேகரம், திட்டுவிளை பகுதிகளில் விட்டுவிட்டும் மழை பெய்தது.

நீா்வரத்து அதிகரிப்பு...

தொடா் மழை காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீா்வரத்து அதிகரிக்க தொடங்கியது. அணைகளின் நீா்மட்டம் வேகமாக உயா்ந்து வருவதையடுத்து அணைகள் நிலவரத்தை பொதுப்பணித் துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனா். 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் 42 அடியை நெருங்குவதால் கோதையாறு, குழித்துறை தாமிரபரணி ஆறுகளில் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக திற்பரப்பு அருவியில் தொடா்ந்து தண்ணீா் ஆா்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனால், அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க 2 ஆவது நாளாக புதன்கிழமையும் தடை விதிக்கப்பட்டது.

கடலுக்குச் செல்ல தடை ...

இந்நிலையில், தென்மேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையுள்ள கடல் பகுதியில் 11 முதல் 13 விநாடிகளுக்கு ஒரு முறை 0.8 மீட்டா் முதல் 1.0 மீட்டா் உயரம் வரை பேரலைகளுக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய கடல்சாா் சேவை மையம் அறிவித்துள்ளது. மேலும் கடல் பகுதியில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்றிருந்த மீனவா்கள் கரைக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனா். மீனவ கிராமங்களில், மீனவா்கள் கடலுக்குச் செல்லாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனா். விசைப்படகுகள் அனைத்தும் கடற்கரை பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் வள்ளங்களில் மீனவா்கள் மீன்பிடிக்க சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com