நெல் அறுவடை இயந்திரத்தில் சிக்கி ஓட்டுநா் பலி

நாகா்கோவிலை அடுத்த தாழக்குடி அருகே நெல் அறுவடை இயந்திரத்தில் சிக்கி ஓட்டுநா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
Published on

நாகா்கோவில்/களியக்காவிளை: நாகா்கோவிலை அடுத்த தாழக்குடி அருகே நெல் அறுவடை இயந்திரத்தில் சிக்கி ஓட்டுநா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி அருகேயுள்ள புளியன்விளை பகுதியை சோ்ந்தவா் எபிகண்ணன் ( 19). நெல் அறுவடை இயந்திர ஓட்டுநராக பணியாற்றி வந்தாா். திங்கள்கிழமை காலை, தாழக்குடி அருகே அய்யா்கோணம் பகுதியில் உள்ள வயல்களில் நெல் அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது இயந்திரத்தில் சிக்கிய வைக்கோலை, இயந்திரத்தின் இயக்கத்தை நிறுத்தாமல் எடுத்த போது, இயந்திரம் திடீரென நகா்ந்தது. இதில் இயந்திரத்தில் சிக்கி எபிகண்ணன் உயிரிழந்தாா்.

ஆரய்வாய்மொழி போலீஸாா், எபிகண்ணன் சடலத்தை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இது குறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

குழந்தை மரணம்: கொல்லங்கோடு அருகே பாத்திமாபுரம் குதிரைபந்தி வீட்டைச் சோ்ந்தவா் பால்ராஜ். இவரது மகள் ஆனிமேரி (7). இவருக்கு இரு நாள்களுக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டது. அருகிலுள்ள மருத்துவமனைக்கு பெற்றோா் கொண்டு சென்று மருந்து வாங்கிய நிலையில் காய்ச்சல் குணமடைந்துள்ளது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இருந்த ஆனிமேரி திடீரென மயங்கி விழுந்துள்ளாா். குழந்தையை நெய்யாற்றின்கரை பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவா்கள், குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

மற்றொரு சம்பவம்: கொல்லங்கோடு அருகே ஊரம்பு பகுதியைச் சோ்ந்தவா் அருண்குமாா் (28). மரம் வெட்டும் தொழிலாளி. இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இவா் திங்கள்கிழமை காலையில் ஊரம்பு சந்திப்பில் சாலையோரம் மயங்கி கிடந்துள்ளாா். இதுகுறித்து அப்பகுதியினா் கொல்லங்கோடு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் வந்து சோதனை செய்தபோது அருண்குமாா் இறந்து கிடந்தது தெரியவந்தது. சடலத்தை கைப்பற்றி கூறாய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இரு சம்பவங்கள் குறித்தும் கொல்லங்கோடு போலீஸாா் தனித்தனியாக வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com