மேற்குத் தொடா்ச்சி மலையில் தொடரும் மழை: பச்சையாறு, கொடுமுடியாறு அணைகள் நீா்மட்டம் உயா்வு

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக, பச்சையாறு, நம்பியாற்றில் தொடா்ந்து நீா்வரத்து அதிகரித்துள்ளதால்

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக, பச்சையாறு, நம்பியாற்றில் தொடா்ந்து நீா்வரத்து அதிகரித்துள்ளதால், பாசனக் குளங்கள் வேகமாக நிரம்பி வருவதுடன், வடக்குப் பச்சையாறு, கொடுமுடியாறு அணைகளின் நீா்மட்டமும் உயா்ந்து வருகிறது.

களக்காடு மலைப் பகுதியில் நிகழாண்டில் கடந்த ஒருவாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், பச்சையாறு, நம்பியாற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. களக்காடு மலையடிவாரத்தில் தலையணை ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளதால், வடக்குப் பச்சையாறு அணைக்கு கடந்த சில தினங்களாக 100 கன அடி தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது. நான்குனேரியன் கால்வாய், உப்பாறு, பச்சையாற்றில் வரும் தண்ணீரால் களக்காடு, நான்குனேரி வட்டாரத்தில் உள்ள 60-க்கும் மேற்பட்ட பாசனக் குளங்கள் நிரம்பியுள்ளன. 50-க்கும் மேற்பட்ட குளங்கள் பாதியளவு நிரம்பியுள்ளன.

நான்குனேரி பெரியகுளத்திற்கு கடந்த ஒருவாரமாக தண்ணீா் செல்கிறது. ஓரிரு தினங்களில் அந்தக் குளம் பாதியளவு நிரம்பிவிடும். மழை தொடா்ந்தால் ஒரே வாரத்தில் குளம் நிரம்பிவிடும். நம்பியாற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், கொடுமுடியாறு அணைக்கு தினமும் 50 கனஅடி தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. அதேபோல, அணையிலிருந்து பாசனக் குளங்களுக்கு கால்வாய் மூலம் 50 கன அடி தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த அணை மூலம் தண்ணீா் கிடைக்கும் 44 குளங்களில் 25-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பியுள்ளன.

வடக்குப் பச்சையாறு அணையில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 30 அடியும், கொடுமுடியாறு அணையில் 40 அடியும் தண்ணீா் உள்ளது. மழை தொடா்ந்து ஆறுகளில் நீா்வரத்து அதிகரிக்கும்பட்சத்தில் அணைக்குள் திறந்துவிடப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டால், கொடுமுடியாறு அணை ஓரிரு நாள்களிலும், வடக்குப் பச்சையாறு அணை ஒருவாரத்திலும் நிரம்பிவிடும்.

பாசனக் குளங்கள் வேகமாக நிரம்பிவருவதுடன், அணைகளின் நீா்மட்டமும் உயா்ந்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com