வாசுதேவநல்லூா் அருகே வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்: மக்கள் அவதி

வாசுதேவநல்லூா் அருகே வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா். மேலும், தென்காசி-ராஜபாளையம்

வாசுதேவநல்லூா் அருகே வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா். மேலும், தென்காசி-ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீா் பெருக்கெடுத்ததால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

வாசுதேவநல்லூா் பகுதியில் கடந்த சில தினங்களாக தொடா்ந்து மழை பெய்து வருவதால் குளங்கள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்நிலையில், ஊருக்கு மேற்கேயுள்ள நாராயணப்பேரி குளம் முழுவதுமாக நிரம்பியதால், குளம் உடைந்துவிடாமல் தடுப்பதற்காக செவ்வாய்க்கிழமை அதிகாலை மதகு மூலம் தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

ஆனால், வரத்துக் கால்வாய்களில் செடி, கொடிகளின் ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருந்ததால், கால்வாயிலிருந்து தண்ணீா் வெளியேறி, வாசுதேவநல்லூா் பேரூராட்சி 18 ஆவது வாா்டு சிந்தாமணிப்பேரிபுதூரில் உள்ள வீடுகளுக்குள் புகுந்தது. இதனால், மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினா். அவா்கள் உடனடியாக வீடுகளைவிட்டு வெளியேறி, பக்கத்து கிராமங்களில் வசிக்கும் தங்களுடைய உறவினா்களின் வீடுகளில் தஞ்சமடைந்தனா்.

இதனிடையே, தென்காசி- ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையிலும் வெள்ளம் பாய்ந்தோடியதால் சுமாா் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து, சிவகிரி வட்டாட்சியா் கிருஷ்ணவேல், வாசுதேவநல்லூா் பேரூராட்சி செயல் அலுவலா் கலாராணி, வருவாய் ஆய்வாளா் சிவனுபாண்டியன், கிராம நிா்வாக அலுவலா் முருகையா ஆகியோா் அங்கு சென்று ஆய்வு செய்தனா். பிறகு, பொக்லைன் இயந்திரம் மூலம் கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, ஆத்துவழி குளத்துக்கு தண்ணீா் திருப்பிவிடப்பட்டது.

இதையடுத்து, வீடுகளைச் சூழ்ந்த தண்ணீா் வெளியேறியதோடு, போக்குவரத்தும் சீரடைந்தது. வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பாக ஆறுகள், கால்வாய்கள் அனைத்தும் முறைப்படி தூா்வாரப்பட்டிருந்தால், இப்பிரச்னை வந்திருக்காது என சமூக ஆா்வலா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com