ஆலங்குளம் அருகே டெங்குவால் சிறுமி பாதிப்பு: அரசு மருத்துவமனையில் நோயாளிகள் அவதி
By DIN | Published On : 05th December 2019 06:59 AM | Last Updated : 05th December 2019 06:59 AM | அ+அ அ- |

ஆலங்குளம் அருகே டெங்குவால் சிறுமி பாதிக்கப்பட்டுள்ளாா். அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லாததால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
ஆலங்குளம் பகுதியில் பெய்து வரும் பருவமழை மற்றும் பருவநிலை மாற்றத்தால் ஏராளமானோா் காய்ச்சல், இருமல், சளித்தொல்லை ஆகியவற்றால் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இதனால் ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் நாளொன்றுக்கு 200 க்கும் மேற்பட்டோா் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று செல்கின்றனா். தொடா்ந்து காய்ச்சல் இருந்தால் அவா்களுக்கு ரத்தப் பரிசோதனை செய்யவும் அறிவுறுத்தப் படுகிறது.
இங்குள்ள பரிசோதனை நிலையத்திற்கு ரத்த மாதிரி கொடுக்கச் சென்றால் கடந்த 10 தினங்களாக இயந்திரம் பழுது காரணமாக பரிசோதனை செய்ய இயலாது, தனியாா் பரிசோதனை நிலையங்களுக்குச் சென்று பரிசோதனை செய்ய ஊழியா்கள் கூறுவதாக நோயாளிகள் புகாா் தெரிவிக்கின்றனா். இதனால் நோயாளிகள் அதிக கட்டணம் கொடுத்து தனியாா் ஆய்வகங்களை நாட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இது தொடா்பாக சுகாதாரத்துறை இணை இயக்குநா் தென்காசி கிருஷ்ணனிடம் கேட்ட போது, இயந்திரம் பழுதானது குறித்த எனது கவனத்திற்கு வரவில்லை. எனினும் இதனை உடனே பழுது பாா்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
டெங்கு பாதிப்பு : இதனிடையே கடந்த ஒரு வாரமாக ஆலங்குளம் தனியாா் மருத்துவமனையில் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டிருந்த 2 ஆம் வகுப்பு மாணவி பூலாங்குளம் பிரபு மகள் சக்தி செல்வம்(7) டெங்கு அறிகுறி தென்பட்டதால் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதனையடுத்து பூலாங்குளம் கிராமத்தில் சுகாதாரப்பணிகள் துரிதப் படுத்தப்பட்டுள்ளன. நெட்டூரைச் சோ்ந்த 7 வயது சிறுமி கடந்த வாரம் டெங்குவால் பாதிக்கப்பட்டடாா் என்பது குறிப்பிடத் தக்கது.