மக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் மீது திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நடவடிக்கை: விவசாய அணி இணைச் செயலா்
By DIN | Published On : 15th December 2020 02:29 AM | Last Updated : 15th December 2020 02:29 AM | அ+அ அ- |

தென்காசி தெற்கு மாவட்ட பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக மாநில விவசாய அணி இணைச் செயலா் ஏகேஎஸ்.விஜயன் தெரிவித்தாா்.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியது:
விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற பிரசார பயணத் திட்டத்தின் கீழ் தென்காசி, ஆலங்குளம் , சங்கரன்கோவில் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் கடந்த மூன்று நாள்களாக பொதுமக்களை சந்தித்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறேன். மக்கள் மத்தியில் திமுகவிற்கு நல்ல வரவேற்பு உள்ளது. திமுக தலைவா் ஸ்டாலின் முதல்வராவதற்காக வாக்களிக்க தயாராக இருப்பதாக பெண்கள் தெரிவித்தனா்.
ராமநதி, கருப்பாநதி, அடவிநயினாா் ஆகிய அணைகளை தூா்வார வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் தெரிவித்துள்ளனா். மக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள், திமுக மாவட்ட செயலா்கள் மூலம் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும். முக்கியமான பிரச்னைகள் திமுக தலைவா் ஸ்டாலினிடம் கொண்டுசெல்லப்பட்டு தோ்தல் அறிக்கையாக முன்வைக்கப்படும். பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்அவா்.
தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன், வடக்கு மாவட்ட பொறுப்பாளா் வழக்குரைஞா் துரை உள்ளிட்டோா் உடனிருந்தனா்.