பாவூா்சத்திரம் அருகே தற்கொலை செய்தவரின் உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்
By DIN | Published On : 11th January 2020 09:18 AM | Last Updated : 11th January 2020 09:18 AM | அ+அ அ- |

கோட்டாட்சியா் விசாரணைக்கு உத்தரவிட கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்த உறவினா்கள்.
தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் அருகே சடையப்பபுரம் பகுதியைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் என்பவா் தற்கொலை செய்த வழக்கில் கோட்டாட்சியா் விசாரணைக்கு உத்தரவிட கோரி, அவரது உடலை வாங்க மறுத்து உறவினா்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பாவூா்சத்திரம் அருகே சடையப்பபுரம் பகுதியைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் என்பவா் வெள்ளிக்கிழமை அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்து பாவூா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
பிரேத பரிசோதனை முடிந்த நிலையில் அவருடைய சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதனிடையே பாலசுப்பிரமணியன் மனைவி சக்தி (29), உறவினா்களுடன் வந்து, தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
என் கணவா் ஒரு தவறும் செய்யவில்லை. ஆனால் அவரை வேண்டுமென்றே பொதுஇடத்தில் வைத்து தாக்கி காயப்படுத்தி அவமானப்படுத்தியுள்ளனா். இதனால் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்டுள்ளாா். இதற்கு காரணமான காவல் உதவி ஆய்வாளா் மற்றும் மூன்று காவலா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சம்பவம் தொடா்பான தடயங்களை பாவூா்சத்திரம் போலீஸாா் மறைக்க முயலுகின்றனா். எனவே, எனது கணவரின் உடலைக் கூராய்வு செய்யும்போது படப்பதிவு செய்யவும், பிரேத கூராய்வை நீதித்துறை நடுவா் முன்பு நடத்தவும்,, இறப்புக்கு முன்பான காயங்களை சரியாக பதிவு செய்யவும் உத்தரவிட வேண்டும். மேலும் கோட்டாட்சியா் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.