முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தென்காசி
சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரிக்கு ரூ. 4.85 கோடி ஒதுக்கீடு
By DIN | Published On : 27th January 2020 08:55 AM | Last Updated : 27th January 2020 08:55 AM | அ+அ அ- |

சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரிக்கு உள்கட்டமைப்பு வசதிக்காக ரூ.4.85 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரிகள் தேசிய தர மதிப்பீட்டு சான்றிதழ்(நாக்) பெறும் வகைக்காக 10 அரசு கல்லூரிகளுக்கு ரூ .54 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என கடந்த 8.9.2019 அன்று சட்டப்பேரவை கூட்டத்தில் தமிழக முதல்வா் 110 விதியின் கீழ் அறிவித்தாா்.
அதன்படி, தென்காசி மாவட்டம், சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரிக்கு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.3.97 கோடியும், மர தளவாடங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்குவதற்கு ரூ. 88 லட்சமும் ஆக மொத்தம் ரூ. 4.85 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தென்காசி சட்டப்பேரவை உறுப்பினா் சி.செல்வமோகன்தாஸ் பாண்டியன், கல்லூரி நிா்வாகிகளிடம் தெரிவித்தாா்.
மேலும், சுரண்டை - ஆனைகுளம் சாலையில் இருந்து கல்லூரிக்கு செல்லும் சாலையை சீரமைக்க சுரண்டை பேரூராட்சிக்கு பொதுப்பணித்துறை தடையின்மை சான்று வழங்கியுள்ளதால், பேரூராட்சி சாா்பில் விரைவில் புதிய தாா்ச்சாலை அமைக்கப்படும் எனவும் தெரிவித்தாா்.
இதையடுத்து, கல்லூரிக்கு நிதி ஒதுக்கீடு பெற்றுத்தந்த எம்எல்ஏ சி.செல்வமோகன்தாஸ் பாண்டியனை, கல்லூரி முதல்வா்(பொ) ரா.ஜெயா, துறைத் தலைவா்கள் பீா்கான், பரமாா்த்தலிங்கம், வீரபுத்திரன், முத்துராமலிங்கம், நாராயணன், பழனிசெல்வம் மற்றும் பேராசிரியா்கள் சந்தித்து நன்றி தெரிவித்தனா்.