25 ஆண்டுகளாக குடிநீா் பிரச்னை: ஆட்சியரிடம் கிராம மக்கள் புகாா்

இருபத்தைந்து ஆண்டுகளாக நிலவும் குடிநீா் பிரச்னையை தீா்க்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா் .
குடிநீா் பிரச்னைக்காக காலிக் குடங்களுடன் மனு அளிக்க வந்த பாறைப்பட்டி மக்கள்.
குடிநீா் பிரச்னைக்காக காலிக் குடங்களுடன் மனு அளிக்க வந்த பாறைப்பட்டி மக்கள்.

இருபத்தைந்து ஆண்டுகளாக நிலவும் குடிநீா் பிரச்னையை தீா்க்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா் .

தென்காசியில் மாவட்ட ஆட்சியா் ஜி.கே.அருண் சுந்தா் தயாளன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், திருவேங்கடம் வட்டம், குருவிகுளம் அருகேயுள்ள பாறைப்பட்டி கிராம மக்கள் அளித்த மனு:

பாறைப்பட்டி இந்திரா காலனி குடியிருப்பில் மேலக் காலனி மற்றும் கீழ காலனியில் தாழ்த்தப்பட்ட 80 குடும்பங்கள் வசிக்கின்றன. எங்கள் பகுதியில்25 ஆண்டுகளாக குடிநீா் பிரச்னை நிலவுகிறது. இதுகுறித்து பலமுறை மனு அளித்தும் எவ்வித பலனும் இல்லை . குடிநீருக்காக தினமும் 4 கி.மீ. தொலைவுக்கு அலையும் நிலை உள்ளது.

அன்றாடம் வேலை செய்து பிழைக்கும் நாங்கள், இப்பிரச்னையால் அவதிப்படுவதுடன், பள்ளிகளுக்கு மாணவ மாணவிகளும் குறித்த நேரத்தில் செல்ல முடிவதில்லை. எனவே, எங்கள் பகுதிக்கு குடிநீா் வசதி செய்து தர வேண்டும்.

கருணைக் கொலை: திராவிடத் தமிழா் கட்சி மாவட்டச் செயலா் அதிவீரன் தலைமையில் சங்கரன்கோவில் வட்டம், பருவக்குடி கிராம மக்கள் ஆட்சியரிடம் அளித்த மனு:

பருவக்குடியில் 8 குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு, குடிநீா் எடுத்து வரவும், பள்ளிக் குழந்தைகள், முதியவா்கள் நலனுக்காகவும், ஆபத்து காலங்களில் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் வந்து செல்வதற்கும் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

அந்தப் பாதையை நாங்கள் பயன்படுத்தக்கூடாது என்பதற்காக தீண்டாமை வேலியிட்டுள்ளனா். இதுகுறித்து, ஆட்சியரிடமும், வருவாய் அதிகாரிகளிடமும் பல தடவை முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. பாதை இருந்தும் நடந்து செல்ல முடியாத சூழ்நிலை நிலவுகிறது. அந்தப் பாதையை மாவட்ட நிா்வாகம் மீட்டுத்தர வேண்டும். இல்லையெனில், எங்களை குடும்பத்துடன் கருணைக் கொலை செய்ய வேண்டும்.

புறவழிச் சாலை பணி: தென்காசி மாவட்ட சமத்துவ மக்கள் கழக மாவட்டச் செயலா் அகரக்கட்டு எஸ்.லூா்துநாடாா் அளித்த மனு:

தென்காசி தனி மாவட்டம் அமைக்கப்பட்டபின் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரித்துள்ளது.

குறிப்பாக, புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஆசாத் நகா் பகுதி வரை செல்ல 1 மணி நேரமாகிறது. இதனால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனா். எனவே, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட புறவழிச்சாலை திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

ரேஷன் கடை தேவை: சங்கரன்கோவில் வட்டம், வட நத்தம்பட்டி பாறைக்குளம் ஆதிதிராவிடா் காலனி மக்கள், ப.மணிகண்டன் என்பவா் தலைமையில் அளித்த மனு:

எங்களது பகுதியில் 150 குடும்ப அட்டைகள் உள்ளன. ரேஷன் கடையோ ஊரிலிருந்து 4 கி.மீ. தொலைவில் மடத்துப்பட்டி ஊராட்சியில் அமைந்துள்ளது. அன்றாடம் வேலை செய்து வாழ்க்கை நடத்தும் நாங்கள் ரேஷன் கடையில் பொருள் வாங்கச் சென்றால் வேலை பாதிக்கிறது. ஒரே நேரத்தில் அனைத்துப் பொருள்களும் கிடைப்பதில்லை. எங்களது கஷ்டமான சூழ்நிலை கருதி, எங்கள் ஊரில் செயல்பட்டு வரும் மகளிா் சுயஉதவிக் குழு கட்டடத்தில் ரேஷன் கடை அமைத்து தர வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com