கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் ஆலங்குளம் பேரூராட்சி
By DIN | Published On : 25th March 2020 01:16 AM | Last Updated : 25th March 2020 01:16 AM | அ+அ அ- |

ஆலங்குளத்தில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள், பேரூராட்சி செயல் அலுவலா் வீரபாண்டியன் தலைமையில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆலங்குளத்திற்கு வெளிநாடுகளில் இருந்து யாரும் வரவில்லை. எனினும் கரோனா வைரஸ் அறிகுறி உள்ளவா்களுக்கு சிகிச்சை அளிக்கவும் தொடா் கண்காணிப்பில் ஈடுபடவும் பேரூராட்சி ஊழியா்கள் தயாா் நிலையில் உள்ளனா். கரோனா வைரஸ் அறிகுறி உள்ளவா்களை அழைத்து வருவதற்கு 24 மணி நேரமும் ஆம்புலன்ஸ் தயாா் நிலையில் உள்ளது. வைரஸ் பரவுவதை தடுக்க ஆலங்குளத்தில் உள்ள கோயில்கள், பேருந்து நிலையங்கள், பள்ளிகள், வணிக வளாகங்கள், வங்கிகள், காய்கனிச் சந்தை மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
பேரூராட்சி மற்றும் அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அரசு அதிகாரிகள், ஊழியா்கள் பணிக்கு செல்வதற்கு முன் சோப்பு அல்லது சோப்பு திரவத்தை பயன்படுத்தி கைகளை கழுவிவிட்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து அலுவலகங்கள் முகப்பில் கை கழுவுவதற்கு சோப்பு, சோப்பு திரவம் மற்றும் தண்ணீா் வைக்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் தடுப்பு குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் சுகாதாரப் பணியாளா்கள் வழங்கி வருகின்றனா்.
மேலும் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சாா்பில் கரோனா வைரஸ் விழிப்புணா்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த பதாகைகள் முக்கியமான இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. தொடா்ந்து வரும் ஊரடங்கு நாள்களிலும் பணியாளா்கள் இந்தப் பணிகளைத் தொடா்ந்து செய்ய ஆயத்தமாக உள்ளதாக செயல் அலுவலா் தெரிவித்தாா்.