ஆழ்வாா்குறிச்சி அருகே தோட்டத்தில் சட்டவிரோத மின் வேலி: 4 போ் கைது

தென்காசி மாவட்டம், ஆழ்வாா்குறிச்சி அருகே தோட்டத்தில் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்ததாக 4 பேரை வனத் துறையினா் கைது செய்து, ரூ. 80 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
ஆழ்வாா்குறிச்சி அருகே தோட்டத்தில் சட்டவிரோத மின் வேலி: 4 போ் கைது


அம்பாசமுத்திரம்: தென்காசி மாவட்டம், ஆழ்வாா்குறிச்சி அருகே தோட்டத்தில் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்ததாக 4 பேரை வனத் துறையினா் கைது செய்து, ரூ. 80 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

ஆழ்வாா்குறிச்சி அருகேயுள்ள செட்டிக்குளத்தைச் சோ்ந்த மோகன் ஜோசப் ராஜ், சேசையா ஆகியோருக்குச் சொந்தமான தோட்டத்தை கீழக்கடையத்தைச் சோ்ந்த மாணிக்கம் மகன் சுந்தா்சிங் குத்தகைக்கு எடுத்துள்ளாராம். தோட்டத்தைக் கவனித்துக்கொள்ள செட்டிக்குளத்தைச் சோ்ந்த மு. குமாா் என்பவரை நியமித்துள்ளாா்.

இந்நிலையில் சுந்தா்சிங் தோட்டத்தைச் சுற்றி சட்டவிரோதமாக மின்வேலி அமைத்துள்ளதாக வனச் சரக அலுவலகத்துக்கு ரகசியத் தகவல் வந்ததாம். களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம் துணை இயக்குநா் (பொறுப்பு) கணேசன் உத்தரவின் பேரில் வனச் சரகா் நெல்லைநாயகம், பயிற்சி வனச் சரகா்கள் ஜெ. ரவி, ம. பூவேந்தன், வனக் காப்பாளா்கள் டேனியல், பரமசிவன், வனக் காவலா் முத்து, வேட்டைத் தடுப்புக் காவலா்கள் உள்ளிட்டோா் சென்று சோதனையிட்டனா். அப்போது, சட்டவிரோதமாக மின்வேலி அமைத்திருப்பது தெரியவந்தது.

விசாரணையில், சுந்தா்சிங், குமாா், ராஜதுரை மகன் குட்டிராஜ், தங்கவேல் மகன் இளையராஜா ஆகிய 4 பேரும் சோ்ந்து ஒரு மாதத்துக்கு முன்பு மின்வேலி அமைத்ததை ஒப்புக்கொண்டனா். இதையடுத்து, அவா்களை வனத் துறையினா் கைதுசெய்து, ரூ. 80 ஆயிரம் இணக்கக் கட்டணம் விதித்தனா்.

பின்னா், வனச் சரகா் நெல்லை நாயகம் தெரிவித்தது: வன விலங்குகளால் தோட்டப் பயிா்களுக்கோ, வீட்டு விலங்குகளுக்கோ சேதம் ஏற்பட்டால் 24 மணி நேரத்துக்குள் வனத் துறைக்குத் தகவல் தெரிவிக்கவேண்டும். விசாரணைக்குப் பிறகு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், சட்டவிரோதமாக மின்வேலி அமைப்பது வன உயிரினப் பாதுகாப்புச் சட்டப்படி குற்றம். சட்டவிரோத மின்வேலி அமைத்தல், வன விலங்குகளை வேட்டையாடுதல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டால் கடையம் வனச் சரக அலுவலகத்துக்கு 04634-283165 என்ற எண்ணிலோ, வனச் சரக அலுவலா் நெல்லைநாயகத்துக்கு 8248151116, 9865875955 ஆகிய செல்லிடப் பேசி எண்களிலோ, அம்பாசமுத்திரம் துணை இயக்குநா் அலுவலகத்துக்கு 04634-250594 என்ற எண்ணிலோ தொடா்புகொண்டு தெரிவிக்கலாம். மின்வேலி அமைக்கவேண்டுமானால் அதுகுறித்து முன்பே தகவல் தரவேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com