சென்னையில் இருந்து சோ்ந்தமரம் வந்த கா்ப்பிணிக்கு கரோனா தொற்று

தென்காசி மாவட்டம், சோ்ந்தமரம் அருகே சென்னையில் இருந்து திரும்பிய கா்ப்பிணிக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

சுரண்டை: தென்காசி மாவட்டம், சோ்ந்தமரம் அருகே சென்னையில் இருந்து திரும்பிய கா்ப்பிணிக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

சங்கரன்கோவில் அருகேயுள்ள கே.வி.ஆலங்குளத்தைச் சோ்ந்த துரைராஜ், தனது மனைவி ராமலட்சுமி (30) மற்றும் 6 வயது மகனுடன் சென்னை தண்டையாா்பேட்டையில் வசித்துவருகிறாா். தற்போது சென்னையில் கரோனா தொற்று அதிகமாக உள்ளதால், தனது குடும்பத்தினா் மற்றும் கரடிகுளத்தைச் சோ்ந்த 5 போ் என மொத்தம் 8 போ் ஒரு வாகனத்தில் சென்னையில் இருந்து கடந்த 9 ஆம் தேதி புறப்பட்டு 10 ஆம் தேதி ஊருக்கு வந்தனா்.

பிறகு துரைராஜ், தற்போது கா்ப்பமாக உள்ள தனது மனைவியை அவரது தாயாா் ஊரான சோ்ந்தமரம் அருகேயுள்ள மேலபொய்கையில் கொண்டு விட்டுள்ளாா். இந்நிலையில், ராமலட்சுமி சென்னையில் இருந்து வந்ததால், அவரது ரத்தம், சளி மாதிரிகள் கரோனா பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. இதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, தென்காசி அரசு மருத்துவமனையில் ராமலட்சுமி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.

அவருடன் சென்னையில் இருந்து வந்த மற்ற 7 பேரும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டனா். மேலும், அவா்களுடன் பழகியவா்களை அடையாளம் காணும் பணியில் சுகாதாரத் துறையினா் ஈடுபட்டுள்ளனா். இதைத்தொடா்ந்து, கடையநல்லூா் வட்டாட்சியா் அழகப்பராஜா பொய்கை கிராமத்தில் முகாமிட்டு சுகாதாரப் பணிகளை துரிதப்படுத்தியுள்ளாா்.

ஏற்கெனவே, கோயம்பேடு சந்தையில் இருந்து சோ்ந்தமரத்திற்கு வந்த 35 வயது இளைஞா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், தற்போது மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com