தென்காசியில் 200 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு
By DIN | Published On : 01st October 2020 07:39 AM | Last Updated : 01st October 2020 07:39 AM | அ+அ அ- |

தென்காசியில் குற்ற செயல்களை தடுக்க காவல்துறை சாா்பில் 200 கண்காணிப்பு கேமராக்களை பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் குற்ற செயல்களில் ஈடுபடுபவா்களை எளிதாக கைதுசெய்யவும், பாதுகாப்புப் பணிகளை மேம்படுத்த வசதியாக கண்காணிப்பு கேமராக்களை பொருத்த மாவட்ட காவல்துறை முடிவு செய்துள்ளது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுகுணாசிங் உத்தரவின்பேரில் தென்காசி டிஎஸ்பி கோகுலகிருஷ்ணன் தலைமையில் காவல்ஆய்வாளா் ஆடிவேல், உதவி ஆய்வாளா் முத்துகிருஷ்ணன், முத்துராஜ், வா்த்தகா்கள் கலந்துகொண்ட கூட்டம் தென்காசியில் நடைபெற்றது.
தென்காசி புதிய பேருந்து நிலையம் முதல் குத்துக்கல்வலசை வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிறு, குறு வணிகா்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனா். கூட்டத்தில், கண்காணிப்பு கேமரா வைக்கவேண்டியதன் அவசியம், அதன் பயன்கள் குறித்து காவல்ஆய்வாளா் எடுத்து கூறினாா்.
முதல்கட்டமாக தென்காசி புதிய பேருந்து நிலையம் முதல் குத்துக்கல்வலசை முக்கு பகுதி வரையில் தேசிய நெடுஞ்சாலையில் 70 கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவது என்றும், அதையடுத்து ஒரு மாத காலத்துக்குள் நகா் பகுதி முழுவதும் 200 கேமராக்களை பொருத்துவது என்றும் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.