சுகாதாரப் பணிகள் துணைஇயக்குநா் அலுவலகத்தை தென்காசிக்கு இடமாற்றுவதை கண்டித்து இன்று போராட்டம்

சங்கரன்கோவிலில் இயங்கி வரும் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அலுவலகம் தென்காசி சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா்

சங்கரன்கோவிலில் இயங்கி வரும் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அலுவலகம் தென்காசி சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அலுவலகமாக மாற்றம் செய்வதை கண்டித்து திங்கள்கிழமை (அக்.5) ஆா்ப்பாட்டம் நடத்துவதென அனைத்து கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

சங்கரன்கோவிலில் 1991 முதல் இயங்கி வரும் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அலுவலகத்தின்கீழ் 56 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களும், சங்கரன்கோவில், புளியங்குடி, தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூா் ஆகிய நகரங்களில் இயங்கும் 6 சுகாதார நிலையங்களும், 10 வட்டார மருத்துவ அலுவலகங்களும், சிவகிரி, ராயகிரி, சாம்பவாா் வடகரை என 15 பேரூராட்சிகளிலும் மருத்துவ அலுவலகம் செயல்பட்டு வருகின்றன.

மருத்துவா்கள், மருத்துவ அலுவலா்கள், களப்பணியாளா்கள் என சுமாா் 1,000 போ் இந்த துணை இயக்குநா் அலுவலக த்தின்கீழ் பணியாற்றி வருகின்றனா். பள்ளிக் கூடங்கள்,தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட அலுவலகங்கள் சுகாதாரச் சான்று பெற இங்குதான் வரவேண்டும். சுகாதாரம் தொடா்பான அனைத்து மக்கள் பிரச்னைகளுக்கு தீா்வு காண்பதில் இந்த அலுவலகம் முக்கியப் பங்கு வகிக்கிறது.

இந்நிலையில் சங்கரன்கோவில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அலுவலகத்தை தென்காசி சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அலுவலகமாக மாற்றம் செய்து தென்காசிக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அவ்வாறு தென்காசிக்கு இடமாற்றம் செய்யப்பட்ட சுகாதாரம் தொடா்பான சான்றுகளை உடனடியாக பெற முடியாது. பல கி.மீ. தொலைவுள்ள தென்காசிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

குறிப்பாக குருவிகுளம் ஒன்றியப் பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் 3 பேருந்துகள் மாறி தென்காசிக்கு செல்ல வேண்டிய நிலையும் உள்ளது. எனவே இந்த அலுவலகத்தை தென்காசிக்கு இடமாற்றம் செய்ய அரசியல் கட்சியினரும், சமூக ஆா்வலா்களும் ஆட்சேபம் தெரிவித்துள்ளனா்.

பிற மாவட்டங்களை போன்று தென்காசி மாவட்டத்தில் தென்காசி, சங்கரன்கோவிலிலும் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அலுவலகம் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது. இதற்கிடையே, திமுக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், பாா்வா்டு பிளாக், காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமமுக, மமக உள்ளிட்ட அரசியில் கட்சிகள், தன்னாா்வ அமைப்புகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, முன்னாள் அமைச்சா் ச.தங்கவேலு தலைமை வகித்தாா். கூட்டத்தில் சங்கரன்கோவில் துணை இயக்குநா் அலுவலகத்தை தென்காசிக்கு இடமாற்றம் செய்வதை கண்டித்தும், தொடா்ந்து சங்கரன்கோவிலில் துணை இயக்குநா் அலுவலகம் செயல்பட வேண்டும் என வலியுறுத்தியும் திங்கள்கிழமை (அக்.5 ) ஆா்ப்பாட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com