சங்கரன்கோவில் அருகே இராணுவீரர் மரணம்: உடலை வாங்க மறுத்து மக்கள் சாலைமறியல்

காஷ்மீரில் இறந்த இராணுவ வீரர் உடலை வாங்க மறுத்து கிராம மக்கள் செவ்வாய்கிழமை சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சங்கரன்கோவில்-திருநெல்வேலி சாலையில் மறியலில் ஈடுபட்ட ஆயாள்பட்டி கிராம மக்கள்.
சங்கரன்கோவில்-திருநெல்வேலி சாலையில் மறியலில் ஈடுபட்ட ஆயாள்பட்டி கிராம மக்கள்.

சங்கரன்கோவில்: காஷ்மீரில் இறந்த இராணுவ வீரர் உடலை வாங்க மறுத்து கிராம மக்கள் செவ்வாய்கிழமை சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே ஆயாள்பட்டியைச் சேர்ந்த துரைப்பாண்டியன் மகன் முல்லைராஜ்(28). கடந்த 9 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வந்த அவர் இறுதியில் காஷ்மீர் பகுதியில் உள்ள பாராமுல்லா மாவட்டத்தில் நௌகாம் என்ற இடத்தில் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் கடந்த 11 ஆம் தேதி பிற்பகல் 12.30 மணியளவில் முல்லைராஜின் தாய் அழகாத்தாளுக்கு வந்த செல்போனில் முல்லைராஜ் இறந்துவிட்டதாககக் அவரது நண்பர் ஒருவர் தெரிவித்தாராம். இதனால் அழகாத்தாள் மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இராணுவ அதிகாரிகளிடமிருந்து முறையான தகவல் ஏதும் வராததால்  முல்லைராஜின் குடும்பத்தினர் பரிதவித்தனர்.

இதைத்தொடர்ந்து சங்கரன்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில்  அழகாத்தாள் மாவட்ட ஆட்சியர் அருண்சுந்தர் தயாளனிடம் முறையிட்டார். அவர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து செவ்வாய்கிழமை முல்லை ராஜின் உடலை இராணுவத்தினர் கொண்டு வந்தனர். தகவலறிந்ததும் கிராம மக்கள் திருநெல்வேலி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். முல்லைராஜ் மரணம் தொடர்பாக உண்மை நிலவரத்தை இராணுவ  அதிகாரிகள் தெரிவிக்கவும், இறந்த இராணுவ வீரருக்கான பென்சன் உள்ளிட்ட அரசின் சலுகைகள் அனைத்தும் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் அவர்கள் காலை 9.30 மணி முதல் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மறியல் போராட்டத்திற்கு மதிமுக மாவட்டச்செயலர் தி.மு.ராஜேந்திரன் தலைமை வகித்தார்.

டி. எஸ். பி. பாலசுந்தரம், கோட்டாட்சியர் முருகசெல்லி, வட்டாட்சியர் திருமலைசெல்வி உள்ளிட்டோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதை வழியாகத் திருப்பிவிடப்பட்டது.

இதன்பின்னர் சென்னை ரெஜிமெண்ட் சுபேதார் சக்திவேல், என்.சி.சி. இளநிலை அதிகாரி ராஜீவ் உள்ளிட்ட இராணுவத்தினர், காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அரசின் சலுகைகள் அனைத்தும் கிடைக்கும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து சுமார் 2 மணிநேரப் போராட்டத்திற்குப் பின் பிற்பகல் 12.45 மணிக்கு மறியலை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.

இதன் பின்னர் தேசியக் கொடியால் போர்த்தப்பட்ட முல்லை ராஜ் உடல் அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் அவருக்குச் சொந்தமான இடத்தில் தகனம் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com