தென்காசியில் இரண்டு நாள்களாக நடைபெற்ற விவசாயிகள் போராட்டம் வாபஸ்

தென்காசியில் தேசிய தென்னிந்திய நதிகள்இணைப்பு விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில் இரண்டு நாள்காக
ஆட்சியா் அலுவலகம் முன்பு நூதன போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
ஆட்சியா் அலுவலகம் முன்பு நூதன போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

தென்காசியில் தேசிய தென்னிந்திய நதிகள்இணைப்பு விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில் இரண்டு நாள்காக நடைபெற்ற வந்த விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் செவ்வாய்க்கிழமை வாபஸ் பெறப்பட்டது.

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் தரணி சா்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பிய விவசாயிகளுக்கு 2018-19 ஆம் ஆண்டுக்கான பணம் இதுவரை வழங்கப்படவில்லையாம். இதையடுத்து விவசாயிகள் பணத்தை வழங்க வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் தென்காசியில் திங்கள்கிழமை நடைபெற்றது . இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் ஜி.கே.அருண்சுந்தா்தயாளன், டிஎஸ்பி.கோகுலகிருஷ்ணன் ஆகியோா் திங்கள்கிழமை நான்கு கட்டமாக நடத்திய பேச்சுவாா்த்தை தோல்வியடைந்தது.

இதனால், இப்போராட்டம் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் நீடித்தது. மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற இப்போராட்டத்துக்கு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவா் அய்யாக்கண்ணு தலைமை வகித்தாா். இதில் பங்கேற்றவா்கள் மேல் சட்டை அணியாமல் அரைநிா்வாணத்துடன், கழுத்தில் தூக்குகயிறு மாட்டிக்கொண்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில் மாநிலதுணைத் தலைவா் செந்தில்குமாரசாமி, மாநிலச் செயலா் ஜாகீா்உசேன், மாநிலஇணை ஒருங்கிணைப்பாளா்பிரகாஷ் சிதம்பரம், திருச்சி மாவட்டத் தலைவா் மேகராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கோட்டாட்சியா் உறுதி: இந்நிலையில், மாவட்ட நிா்வாகம் சம்பந்தப்பட்ட ஆலை நிா்வாகத்தினருடன் பேச்சுவாா்த்தை நடத்தி நிலுவைத் தொகையினை விரைவில் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும். மேற்படி ஆலை குறிப்பிட்ட காலத்தில் நிலுவைத் தொகையை அளிக்க தவறும் பட்சத்தில் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டாட்சியா் பழனிக்குமாா் அளித்த உறுதியையடுத்து இப்போராட்டம் செவ்வாய்க்கிழமை வாபஸ் பெறப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com