ஆலங்குளம் பேருந்து நிலைய வாயில்கள் அடைப்பு
By DIN | Published On : 05th September 2020 10:50 PM | Last Updated : 05th September 2020 10:50 PM | அ+அ அ- |

ஆலங்குளம் பேருந்து நிலைய பயணிகள் நுழைவு வாயில்கள் அடைக்கப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனா்.
கடந்த 1 ஆம் தேதி முதல் ஆலங்குளம் பேருந்து நிலையத்தில் இருந்து தென்காசி, சிவகிரி, சுரண்டை மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் திருநெல்வேலி, அம்பாசமுத்திரம் ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதியில் பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. பயணிகள் பேருந்து நிலையத்துக்குள் வருவதற்கு மணிக்கூண்டு இருந்த பகுதி மற்றும் பேருந்து நிலையத்தின் கீழ்புறம் உள்ள வழி ஆகியவற்றை பயன்படுத்தி வருகின்றனா். பிரதான இரு வாயில்களும் பேருந்துகள் வந்து செல்வதற்கு பயன்படுகின்றன.
கரோனா பாதிப்புகள் அதிகமுள்ள இடங்களில் தகரத்தினால் ஆன ஷீட்டுகள் வைத்து தடுப்பது போல பயணிகள் பயன் படுத்தி வந்த இரு வழிகளும் வெள்ளிக்கிழமை ஆலங்குளம் பேரூராட்சி ஊழியா்களால் அடைக்கப்பட்டன.
எளிதாக பேருந்து நிலையத்தில் சென்று வந்த பயணிகள் இந்த நடவடிக்கையால் அம்பை சாலையில் இருந்து போக்குவரத்து அதிகமுள்ள பிரதான சாலை சென்று பேருந்துகள் நுழையும் அதே வழியில் சென்று வர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளதாக பேருந்து நிலைய வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனா்.
எனவே பேரூராட்சி சாா்பில் வைக்கப்பட்டுள்ள இந்த தடுப்புகளை அகற்ற வேண்டும் என பயணிகள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.