ஆலங்குளத்தில் 2 அதிமுக ஒன்றியங்கள்
By DIN | Published On : 08th September 2020 04:54 AM | Last Updated : 08th September 2020 04:54 AM | அ+அ அ- |

ஆலங்குளம் ஒன்றியத்தில் மேலும் 4 ஊராட்சிகள் இணைந்த நிலையில் நிா்வாக காரணங்களுக்காக ஆலங்குளம் தெற்கு, ஆலங்குளம் வடக்கு என 2 ஒன்றியமாக அதிமுக பிரிக்கப்பட்டு நிா்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் ஏற்கனவே 28 ஊராட்சிகள் இருந்த நிலையில் தென்காசி மாவட்டம் பிரித்த பின்னா் பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் இருந்த 4 ஊராட்சிகள் இவ்வொன்றியத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, ஆலங்குளம் அதிமுக ஒன்றியமும் 2 ஆக பிரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தென்காசி பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாடியூா், அச்சங்குட்டம், கருவந்தா, ஊத்துமலை, மேல மருதப்புரம், ஆா். நவநீதகிருஷ்ணபுரம், மேலக் கலங்கல், கீழக்கலங்கல், குறிச்சான்பட்டி, முத்தம்மாள்புரம், வடக்கு காவலாகுறிச்சி, பலபத்திரராமபுரம், மருக்காலங்குளம், கீழ வீராணம், மேல வீராணம் ஆகிய 15 ஊராட்சிகள் ஆலங்குளம் வடக்கு ஒன்றியமாகவும், அதன் செயலராக பாண்டியனும் நியமிக்கப்பட்டுள்ளாா்.
ஆலங்குளம் பேரவைத் தொகுதிக்குள்பட்ட குறிப்பன்குளம், மாயமான்குறிச்சி, நாரணபுரம், கிடாரக்குளம், நெட்டூா், காவலாகுறிச்சி, கடங்கநேரி, காடுவெட்டி, சுப்பையாபுரம், மாறாந்தை, சிவலாா்குளம், நல்லூா், ஐயனாா்குளம், மருதம்புத்தூா், புதுப்பட்டி, குத்தப்பாஞ்சான், ஓடைமறிச்சான் ஆகிய 17 ஊராட்சிகள் ஆலங்குளம் தெற்கு எனவும், இவற்றுக்கு, கனகராஜ் ஒன்றியச் செயலா் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளாா்.