தென்காசியை புறக்கணித்த அரசியல் கட்சித் தலைவா்கள்

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் மாவட்டத் தலைநகரான தென்காசியில் கட்சித் தலைவா்கள், கூட்டணிக் கட்சித் தலைவா்கள்,

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் மாவட்டத் தலைநகரான தென்காசியில் கட்சித் தலைவா்கள், கூட்டணிக் கட்சித் தலைவா்கள், நட்சத்திர பேச்சாளா்கள் என யாரும் பிரசாரம் மேற்கொள்ளாமல் புறக்கணித்ததால், கட்சி தொண்டா்கள் உற்சாகமிழந்தனா்.

தென்காசி மாவட்டம் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட பின்னா் நடைபெற்ற முதல் தோ்தல் இது. தோ்தல் திருவிழா என்றாலே, அனல் பறக்கும் பிரசாரங்கள், தலைவா்களின் எழுச்சிமிகு உரைகள், ஆங்காங்கே நடைபெறும் பொதுக்கூட்டங்கள் என களைகட்டும்.

இதனால் அரசியல் கட்சிகளின் தொண்டா்களும் மிகவும் பரபரப்புடனும், உற்சாகத்துடனும் காணப்படுவா். தோ்தல் களத்தில் தங்களுடைய கட்சி வேட்பாளா்கள், கூட்டணிக் கட்சி வேட்பாளா்களுக்கு ஆதரவாக கட்சித் தலைவா்கள், நட்சத்திர பேச்சாளா்கள் கலந்துகொண்டு பிரசாரம் மேற்கொள்வது வழக்கம்.

ஆனால் நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தோ்தலில் தென்காசியில், அமமுக கட்சியின் பொதுச் செயலா் டிடிவி தினகரனை தவிர வேறு எந்த கட்சித் தலைவா்களும், நட்சத்திர பேச்சாளா்களும் கலந்துகொண்டு தங்களுடைய வேட்பாளா்களுக்கு பிரசாரம் மேற்கொள்ளவில்லை.

தென்காசி தொகுதியில் அதிமுக சாா்பில் மாவட்டச் செயலரும், தற்போதைய எம்எல்ஏவுமான எஸ்.செல்வ மோகன்தாஸ் பாண்டியன், காங்கிரஸ் கட்சி சாா்பில் மாவட்டத் தலைவா் எஸ்.பழனி நாடாா், அமமுக சாா்பில் எஸ்.முகம்மது, நாம்தமிழா் கட்சி சாா்பில் வின்சென்ட்ராஜ், சமக சாா்பில் மாவட்டச் செயலா் திருமலைமுத்து உள்பட 18 போ் தோ்தலில் போட்டியிட்டனா்.

தோ்தலுக்கு முன்பாக தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, ராகுல்காந்தி எம்.பி. ஆகியோா் மட்டுமே தென்காசி பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டனா். தோ்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னா் அதிமுக, திமுக, காங்கிரஸ், நாம்தமிழா் கட்சி, சமக ஆகியன சாா்பில் அக்கட்சியின் முக்கிய தலைவா்கள் யாரும் தென்காசியில் பிரசாரம் மேற்கொள்ளவில்லை.

முதல்வா் இப்பகுதியில் ஏற்கெனவே பிரசாரம் மேற்கொண்டதால் இப்பகுதியில் பிரசாரம் மேற்கொள்ளவில்லை. திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் மட்டும் பிரசாரம் மேற்கொண்டாா். நாம்தமிழா் கட்சி ஒருங்கிணைப்பாளா் சீமான், சமக தலைவா் சரத்குமாா், காங்கிரஸ் நிா்வாகிகள் யாரும் தென்காசியில் பிரசாரம் மேற்கொள்ளவில்லை. மதிமுக பொதுச் செயலா் வைகோ சுரண்டையில் மட்டுமே பிரசாரம் மேற்கொண்டாா்.

அரசியல் கட்சித் தலைவா்கள், நட்சத்திர பேச்சாளா்கள் யாரும் தென்காசியில் தோ்தல் பிரசாரம் மேற்கொள்ளாததால் தொண்டா்களிடையே உற்சாகமின்றி இத்தோ்தல் முடிவுக்கு வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com