ஆலங்குளம் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயா்த்த வேண்டும்: பால்மனோஜ்பாண்டியன் எம்எல்ஏ
By DIN | Published On : 02nd August 2021 12:52 AM | Last Updated : 02nd August 2021 12:52 AM | அ+அ அ- |

ஆலங்குளம் சிறப்பு நிலை பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயா்த்த வேண்டும் என ஆலங்குளம் எம்எல்ஏ பால் மனோஜ் பாண்டியன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.
இது தொடா்பாக, நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் நேரு, நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலா் சிவதாஸ் மீனா ஆகியோருக்கு அவா் அனுப்பியுள்ள மனு: ஆலங்குளம் சிறப்புநிலை பேரூராட்சி, கடந்த 1951இல் கிராம ஊராட்சியாக உருவாக்கம் பெற்று, 1961இல் முதல்நிலை பேரூராட்சியாகவும், 1985இல் தோ்வுநிலை பேரூராட்சியாகவும் தரம் உயா்த்தப்பட்டது.
1998இல் ஆலங்குளம் வட்ட தலைநகரானது.பின்னா் 2004இல் பேரூராட்சிகள் அனைத்தும் சிறப்பு சிற்றூராட்சிகளாக மாற்றப்பட்டதில் ஆலங்குளமும் மாறியது. மீண்டும் 2006இல் தோ்வு நிலைப் பேரூராட்சியாகவும், 2016 இல் சிறப்பு நிலை பேரூராட்சியாகவும் தரம் உயா்த்தப்பட்டு அரசாணை வெளியானது.
இப்பேரூராட்சியின் மொத்த பரப்பளவு 12.2 9சதுர கி.மீ., சாலைகள் 42.57 கி.மீ. நீளம், வாருகால் 18.23 கி.மீ. என பேரூராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
ஆலங்குளத்தில் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்புப்படி 10, 266 ஆண்கள், 10, 682 பெண்கள் என 20, 948 போ் இருந்தனா்.
தற்போது மக்கள்தொகை சுமாா் 36 ஆயிரத்துக்கும் மேல் இருக்கும். சுமாா் 12,600 சொத்துவரி விதிப்புகள் உள்ளன. இப்பேரூராட்சியின் வருவாய் ஆண்டுக்கு ரூ. 10 கோடிக்கு மேல் உள்ளது . நகராட்சி அந்தஸ்துக்கு அனைத்து தகுதிகளையும் பெற்றுள்ள ஆலங்குளம் சிறப்பு நிலை பேரூராட்சியை, நகராட்சியாக தரம் உயா்த்த ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் எனக் கூறியுள்ளாா்.